Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/பெண் டாக்டரிடம் மோசடி நைஜீரிய நபர்கள் கைது

பெண் டாக்டரிடம் மோசடி நைஜீரிய நபர்கள் கைது

பெண் டாக்டரிடம் மோசடி நைஜீரிய நபர்கள் கைது

பெண் டாக்டரிடம் மோசடி நைஜீரிய நபர்கள் கைது

ADDED : பிப் 12, 2024 02:17 AM


Google News
Latest Tamil News
சென்னை:கே.கே.நகரைச் சேர்ந்த 50 வயது டாக்டரான பெண் ஒருவர் மறுமணம் செய்ய, திருமண தகவல் மையத்தின் இணையதளத்தில், படத்துடன் பெயர், தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்திருந்தார்.

இதை பார்த்து, வெளிநாட்டில் இருந்து அழைப்பதாக அலெக்சாண்டர் சான்சீவ் என்பவர் தொடர்பு கொண்டுள்ளார்; 'வாட்ஸாப்' வாயிலாக மணிக்கணக்கில் 'சாட்டிங்' செய்துள்ளார்.

அப்போது, தன்னை டாக்டர் எனக் கூறியவர், நண்பராக பழகி திருமண ஆசை காட்டியுள்ளார்; நேரில் சந்திக்க வருவதாகக் கூறியவர், திருமண பரிசாக விலை உயர்ந்த பொருட்கள், தங்கம் மற்றும் வைர நகைகளை வாங்கி வருவதாகக் கூறியுள்ளார்.

அந்த பெண்ணும், தன்னை திருமணம் செய்ய உள்ள நபருக்காக ஆர்வத்துடன் காத்திருந்தார். இந்த எதிர்பார்ப்பை பயன்படுத்திக்கொண்ட அந்த ஆசாமி, மும்பை விமான நிலையத்தில், விலை உயர்ந்த பரிசு பொருட்களுடன் சுங்கத்துறை அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டேன்; பொருட்களையும், என்னையும் விடுவிக்க, பணம் தேவைப்படுகிறது எனக் கூறியுள்ளார்.

மற்றொரு நபரும், சுங்கத்துறை அதிகாரி போல பேசியுள்ளார். உங்கள் வீட்டிற்கு சி.பி.ஐ., அதிகாரிகள் வருவர். இவரை நாங்கள் கைது செய்ய உள்ளோம்.

பணம் கொடுத்தால் இவரை விட்டுவிடுகிறோம் எனக் கூறியுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த அந்த பெண், வங்கி வாயிலாக 2.87 கோடி ரூபாய் அனுப்பி உள்ளார்.

பணத்தை பெற்ற பின், இருவரும் மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்துவிட்டனர். இது குறித்து அந்த பெண், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து, மோசடி நபர்கள் புதுடில்லி உத்தம் மற்றும் மோகன் நகரில் பதுங்கி இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான தனிப்படை போலீசார், புதுடில்லியில் முகாமிட்டு, நைஜீரியாவைச் சேர்ந்த அகஸ்டின் மதுபுச்சி, 29, சினேது, 36, ஆகியோரை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து நேற்று எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்து உள்ளனர்.

இவர்களிடம் இருந்து ஏழு மொபைல் போன்கள், மூன்று மடிக்கணினி, 40 டெபிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us