Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குறைதீர் முகாமில் அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பரசன் எச்சரிக்கை

குறைதீர் முகாமில் அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பரசன் எச்சரிக்கை

குறைதீர் முகாமில் அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பரசன் எச்சரிக்கை

குறைதீர் முகாமில் அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பரசன் எச்சரிக்கை

ADDED : ஜூன் 29, 2025 12:23 AM


Google News
Latest Tamil News
சென்னை, ''முகாமில் மக்கள் வைத்துள்ள நியாயமான கோரிக்கைகளை ஒரு வார காலத்திற்குள் அனைத்து துறையினரும் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என அமைச்சர் அன்பரசன் குறை தீர்வு முகாமில் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஆலந்துார் மண்டலத்தில் வசிப்போரின் அனைத்துவித குறைகளுக்கு தீர்வு காணும் வகையில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சரும், ஆலந்துார் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அன்பரசனுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி, நங்கநல்லுாரில் நேற்று நடந்தது.

இதில், வருவாய் கோட்டாச்சியர் ரங்கராஜன், மண்டலக்குழு தலைவர் சந்திரன், உதவி கமிஷனர் முருகதாஸ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

முகாமில் நகர் நலச்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் வைத்த கோரிக்கைகள்:

* பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் இருந்து நங்கநல்லுார் பிரதான சாலை இணைப்பு பணி, 22 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

* நங்கநல்லுார், தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ள பொது இடத்தை தனியாரிடம் இருந்து மீட்க வேண்டும்

* நங்கநல்லுாரில் 110 கி.வோ., அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கை. அதை நிறைவேற்றி தர வேண்டும்

* மண்டலம் முழுதும் உள்ள 'அம்மா' குடிநீர் மையங்கள் செயல் இழந்துள்ளன. அவற்றை சீரமைத்து செயல்படுத்த வேண்டும்

*ஆலந்துாரில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. தவிர, மின் பயன்பாடு கணக்கீடு முறையாக எடுப்பதில்லை. அப்பகுதி மக்கள் பல மாதங்களுக்கு முன் கட்டிய கட்டணத்தையே கட்டி வருகின்றனர். ரீடிங் எடுக்கப்பட்டால் பெரும் தொகை செலுத்த வேண்டிய பாதிப்பு ஏற்படும்

* மண்டலத்தில் பெரும்பாலான பிரதான சாலைகளில் வாகனங்கள் ஆக்கிரமிக்கின்றன. எம்.கே.என்., சாலை இருபுறமும் நடைபாதை கடைகள் ஆக்கிரமித்து, போக்குவரத்திற்கு பெரும் சவாலாக உள்ளன என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதைடுத்து, அமைச்சர் அதிகாரிகளிடம் கூறியதாவது:

'அம்மா' குடிநீர் மையங்களை செயல்படும் வகையில் சீரமைக்க பாருங்கள். எம்.கே.என்., சாலையில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். கவுன்சிலர், கட்சியினர் என, யார் தடுத்தாலும் நிறுத்த வேண்டாம்.

ஆதம்பாக்கம், திருவள்ளுவர் நகர் சாலையை ஆக்கிரமிப்பையும் உடனடியாக அகற்றுங்கள். போக்குவரத்து போலீசார் பிரதான சாலைகளில் தினமும் வலம்வந்து, ஆக்கிரமிப்பு வாகனங்களை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

முகாமில் மக்கள் வைத்துள்ள நியாயமான கோரிக்கைகளை, ஒரு வார காலத்திற்குள் அனைத்து துறையினரும் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை மதிய விருந்து அளிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us