Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 40 கி.மீ., ஆவடி போலீஸ் கமிஷனரகம் செல்ல எண்ணுார், மணலி மக்கள் .. திண்டாட்டம்

40 கி.மீ., ஆவடி போலீஸ் கமிஷனரகம் செல்ல எண்ணுார், மணலி மக்கள் .. திண்டாட்டம்

40 கி.மீ., ஆவடி போலீஸ் கமிஷனரகம் செல்ல எண்ணுார், மணலி மக்கள் .. திண்டாட்டம்

40 கி.மீ., ஆவடி போலீஸ் கமிஷனரகம் செல்ல எண்ணுார், மணலி மக்கள் .. திண்டாட்டம்

ADDED : செப் 08, 2025 06:24 AM


Google News
Latest Tamil News
எண்ணுார்: எண்ணுார், மணலி, மணலி புதுநகர் மக்கள் 40 கி.மீ., துாரம் பயணித்து, நேரடி பேருந்து வசதி கூட இல்லாத ஆவடி போலீஸ் கமிஷனரகம் செல்ல வேண்டியுள்ளதால் மிகவும் திண்டாடுகின்றனர். அருகே உள்ள சென்னை போலீஸ் கமிஷனரகத்துடன் இணைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். எண்ணுாரில் குற்றங்கள் அதிகரிப்பாலும், மக்கள் தொகை பெருகி வருவதாலும், காவல் நிலையத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து, 25 காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டு, 2022ம் ஆண்டில், ஆவடி தனி போலீஸ் கமிஷனரகம் உருவாக்கப்பட்டது.

இதில், சென்னை மாநகராட்சிக்குள் இருக்கும் எண்ணுார், சாத்தாங்காடு, மணலி மற்றும் மணலிபுதுநகர் காவல் நிலையங்கள், ஆவடி கமிஷனரகத்தில் இணைக்கப்பட்டன. தற்போது இதன் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

அப்போதே, 'எண்ணுாரில் இருந்து ஆவடி, 40 கி.மீ., துாரத்தில் உள்ளது. அங்கு செல்ல நேரடி பேருந்து, ரயில் உள்ளிட்ட வசதிகள் கிடையாது. மாறாக, தனி வாகனத்தில் செல்லவும் அதிக பொருட்செலவும் ஆகும்' என, அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனாலும், அதை கருத்தில் கொள்ளாமல், நான்கு காவல் நிலையங்களும் ஆவடி கமிஷனரகத்தில் இணைக்கப்பட்டன. இதனால், புகார் தொடர்பாக, கமிஷனர் அலுவலகம் செல்லும் பொதுமக்களும், அலுவலக பணி மற்றும் கூட்டங்களுக்கு தலைமையகம் செல்ல வேண்டிய போலீசாரும் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

சென்னை காவல் மாவட்டத்தின் தலைநகரமாக செயல்பட்டு வந்த இந்த காவல் நிலையங்கள், ஆவடி கமிஷனரகத்தின் வால் பகுதியாக மாறியிருப்பது, பெரும் சிரமத்தை ஏற்படுத்தியிருப்பதாக, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்த நான்கு காவல் நிலையங்களை, மீண்டும் சென்னை கமிஷனரகத்திற்குள் இணைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இரண்டாக பிரிப்பு?

திருவொற்றியூர் மண்டலத்தின், 1, 2, 3, 4, 5 ஆகிய வார்டுகளை உள்ளடக்கிய பகுதிகளில், நடக்கும் குற்றச் சம்பவங்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை கண்காணிக்க, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில், எண்ணுார் காவல் நிலையம் செயல்படுகிறது.

இப்பகுதிகளில், 1.6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இதில், மக்கள் அடர்த்தி மிகுந்த, சுனாமி குடியிருப்பை கண்காணிப்பதே, காவல் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது.

இங்கு, 150 பிளாக்குகளில், 6,000 வீடுகளில், 24,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இதன் காரணமாகவே, 'அசோக் லேலண்ட்' நிறுவனம் அருகே செயல்பட்டு வந்த எண்ணுார் காவல் நிலையம், சில ஆண்டுகளுக்கு முன், சுனாமி குடியிருப்பு வளாகத்திற்கு மாற்றப்பட்டது.

இது ஒருபுறமிருக்க, எண்ணுார், கத்திவாக்கம் மும்முனை மேம்பாலம் அருகே, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், 6,877 குடியிருப்புகள் கட்டப்பட்டு, ஒதுக்கீட்டிற்கு தயாராக உள்ளது.

இங்கு, பயனாளர்கள் குடியேறும்பட்சத்தில், எண்ணுார் காவல் எல்லைக்குட்பட்ட மக்கள் தொகையில், இரண்டு லட்சத்தை தாண்டும். அதன்படி, சுனாமி குடியிருப்பு போல், மக்கள் அடர்த்தி மிகுந்த இடமாக மாறும்.

அப்போது, 13 அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களில் நடக்கும் குற்றச் சம்பவங்களை கண்காணிப்பதில் சிரமம் ஏற்படும். எனவே, எண்ணுார் காவல் நிலையம், இரண்டாக பிரிக்கப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

மக்களின் அவதி தீரும் எண்ணுார், சாத்தாங்காடு, மணலி மற்றும் மணலிபுதுநகர் ஆகிய காவல் நிலையங்கள், சென்னை போலீஸ் கமிஷனரகத்தில் இருந்தவரை, பொது போக்குவரத்து வசதியால், கமிஷனர் அலுவலகத்தை எளிதில் அணுக முடியும். ஆவடிக்கு மாற்றிய பின், பொது போக்குவரத்து ஏதுமில்லாததால், மக்கள் மட்டுமின்றி போலீசாரும் கடும் சிரமம் மேற்கொள்கின்றனர். தொலைதுார கிராமம் போல், இப்பகுதிகள் மாறிவிட்டன. எனவே, மீண்டும் சென்னை போலீஸ் கமிஷனரகத்திற்குள் இந்த காவல் நிலையங்கள் கொண்டு வந்தால், மக்கள் எளிதில் தலைமை அலுவலகத்தை அணுக கூடிய வாய்ப்பு ஏற்படும்; அவதி தீரும். - குரு.சுப்பிரமணி, 69, செயலர், திருவொற்றியூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்


தீர்வு கிடைக்கும் எண்ணுாரில் இருந்து ஆவடி கமிஷனரகம் செல்ல, 40 கி.மீ., பயணிக்க வேண்டும். அதற்கு, ஒன்றரை மணி நேரம் ஆகும். இப்பகுதிக்கு செல்ல கூடுதல் நேரம் விரயமாவதோடு, பணமும் அதிகம் செலவாகிறது. அதுவே எண்ணுாரில் இருந்து, வேப்பேரி கமிஷனர் அலுவலகம் செல்ல, 17 - 19 கி.மீ., மட்டும் பயணித்தால் போதும்; 40 நிமிடங்களுக்குள் சென்றுவிடலாம். அதனால் அலைச்சல் ஏற்படுவது குறையும்; குற்ற வழக்குகளுக்கும் விரைவாக தீர்வு கிடைக்கும் என, பகுதிமக்கள் எதிர்பார்க்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us