/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குடிநீர் தொட்டிகளில் கழிவுநீர் கலப்பதால் பகுதிமக்கள் தவிப்பு குடிநீர் தொட்டிகளில் கழிவுநீர் கலப்பதால் பகுதிமக்கள் தவிப்பு
குடிநீர் தொட்டிகளில் கழிவுநீர் கலப்பதால் பகுதிமக்கள் தவிப்பு
குடிநீர் தொட்டிகளில் கழிவுநீர் கலப்பதால் பகுதிமக்கள் தவிப்பு
குடிநீர் தொட்டிகளில் கழிவுநீர் கலப்பதால் பகுதிமக்கள் தவிப்பு
ADDED : செப் 15, 2025 01:05 AM

மேற்கு மாம்பலம்; மேற்கு மாம்பலம் ராமையா தெருவில், பழைய பாதாள சாக்கடை குழாய்களை மாற்றி அமைத்தும், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால், பகுதிமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கோடம்பாக்கம் மண்டலம், 140வது வார்டு மேற்கு மாம்பலம் வடிவேல்புரத்தில், ராமையா தெரு உள்ளது. இங்கு, 10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த தெருவில் உள்ள குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்து வந்தது. இதுகுறித்து அப்பகுதிமக்கள் புகார் அளித்ததை அடுத்து, அத்தெருவில் உள்ள பழைய பாதாள சாக்கடை குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டன.
இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட குழாயிலும் உடைப்பு ஏற்பட்டு, குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது.
வீட்டின் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து கருமை நிறத்தில் மாறியுள்ளதால், அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல், குடியிருப்பு மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறியதாவது:
எங்கள் தெருவில் பல ஆண்டுகளாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. குடிநீர் வாரியத்தால், நிரந்தர தீர்வு காண முடியவில்லை.
கழிவுநீர் கலந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல், உறவினர் மற்றும் தெரிந்தவர்கள் வீட்டிற்கு சென்று குளித்து வருகிறோம். குடிப்பதற்கு கேன் குடிநீர் வாங்க வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.