/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரேஷன் அரிசி கடத்தியோரை மடக்கி பிடித்த பகுதிவாசிகள் ரேஷன் அரிசி கடத்தியோரை மடக்கி பிடித்த பகுதிவாசிகள்
ரேஷன் அரிசி கடத்தியோரை மடக்கி பிடித்த பகுதிவாசிகள்
ரேஷன் அரிசி கடத்தியோரை மடக்கி பிடித்த பகுதிவாசிகள்
ரேஷன் அரிசி கடத்தியோரை மடக்கி பிடித்த பகுதிவாசிகள்
ADDED : மே 21, 2025 12:34 AM

பெருங்களத்துார் தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்துார், 58வது வார்டு, நாகாத்தம்மன் கோவில் அருகில், கிருஷ்ணா சாலையில், கே.டி., 01, 02 மற்றும் 179 என்ற மூன்று ரேஷன் கடைகள் இயங்குகின்றன. நேற்று முன்தினம் இருவர், இந்த கடைகளில் இருந்து, அரிசி மூட்டைகளை இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்று, யாரும் இல்லாத இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் ஏற்றினர்.
சந்தேகமடைந்த பகுதிவாசிகள் ஒன்று சேர்ந்து, இருவரையும் மடக்கினர். அவர்கள் அரிசி கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்கள், பெருங்களத்துாரைச் சேர்ந்த தேசிங்கு ராஜா, 33, முடிச்சூரைச் சேர்ந்த பரமசிவம், 44, என்பதும், பரமசிவம், ரேஷன் கடை தற்காலிக ஊழியர் என்பதும் தெரியவந்தது. இருவரையும் உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின், இருவரும் கைது செய்யப்பட்டனர். 13 அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.
மாவு கடைக்கு சப்ளை
இது குறித்து பெருங்களத்துார்-பீர்க்கன்காரணை குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் பி.மகேந்திர பூபதி, 51, கூறியதாவது:
தாம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நெட் ஒர்க் அமைத்து, ரேஷன் அரிசி கடத்துகின்றனர். இதில், ஆளும் கட்சியினரே அதிகம் ஈடுபட்டுள்ளனர். கடத்தப்படும் ரேஷன் அரிசியை, மாவு கடைகளுக்கு சப்ளை செய்து, அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை, மாதா மாதம் பல லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர். இதுபோன்று சிக்கும் போது, ஊழியர்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர்.
கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் தப்பி விடுகின்றனர். அவர்களை கைது செய்தால் மட்டுமே, ரேஷன் அரிசி கடத்தலை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.