ADDED : ஜூலை 10, 2024 01:37 AM

'வேதம் புதிது' கண்ணன் எழுதி, பலமுறை மேடையேறி, ரசிகர்களால் சிலாகிக்கப்படும் நாடகங்களில் ஒன்று தான் 'எல்.கே.ஜி., ஆசை'. இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் 95வது பிறந்தநாள் விழாவில், நேற்று முன்தினம் மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில், மீண்டும் மேடையேறியது. எழுத்துடன் நாடகத்தையும் இயக்கி சபாஷ் பெற்றார் கண்ணன்.
பிளஸ் 2 வரை படித்து, சென்னை பாரிஸ் கார்னரில் வெல்லமண்டி வைத்திருக்கும் மணியாக 'டிவி' வரதராஜனும், திருநெல்வேலி, கடையத்தில் பிறந்து, பி.ஏ., வரை படித்த கோமதியாக லட்சுமியும், நடிப்பில் அசத்தினர். இவர்கள், தங்களது மகள் மீனாட்சியின் எதிர்காலத்தை சிறப்பாக்க, பள்ளியில் இரவெல்லாம் காத்திருந்து, 1,000 ரூபாய்க்கு விண்ணப்பம் வாங்குகின்றனர்.
டென்னிஸ், பேட்மிண்டன், செஸ் உள்ளிட்டவை கற்பிக்க, மார்க்கர் மாணிக்கம் என்பவரை பயிற்சியாளராக நியமிக்கின்றனர். மீனாட்சி, அவரது பெற்றோர், மாஸ்டருக்கு நடுவில் நடக்கும் சம்பவங்களே நாடகத்தின் கதை.
குழந்தை மீனாட்சி, சிறு வயதிலேயே அதிக பாடங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகி, மாயமாகிறாள்.
இறுதியாக ஒரு டாக்டரிடம் தஞ்சமடைய, அவர் குழந்தையின் மூளை பாதிப்பை அறிகிறார்.
பெற்றோரின் அதீத எதிர்பார்ப்பால் குழந்தைக்கு என்ன நடக்கிறது என்பதே, நாடகத்தின் மீதி கதை. 'தினமலர்' நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சியிலிருந்து நாடகம் துவங்குவது, அந்த நாளிதழின் கல்வி சேவைக்கான அங்கீகாரம்.
பாரதியின் 'ஓடி விளையாடு பாப்பா' பாடல் நிறைவாக ஒலிக்க, ரசிகர்களும் கைதட்டி, மன நிறைவுடன் பிரிந்தனர்.
- நமது நிருபர் -