Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 10 மாதங்களாக கழிவுநீர் பிரச்னையால் கிருஷ்ணாபுரம் தெரு மக்கள் அவதி

10 மாதங்களாக கழிவுநீர் பிரச்னையால் கிருஷ்ணாபுரம் தெரு மக்கள் அவதி

10 மாதங்களாக கழிவுநீர் பிரச்னையால் கிருஷ்ணாபுரம் தெரு மக்கள் அவதி

10 மாதங்களாக கழிவுநீர் பிரச்னையால் கிருஷ்ணாபுரம் தெரு மக்கள் அவதி

ADDED : செப் 23, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
சென்னை:ராயப்பேட்டை கிருஷ்ணா புரம் தெருவில், 10 மாதங்களாக நிலவும் கழிவுநீர் பிரச்னையால் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தேனாம்பேட்டை மண்டலம், ராயப்பேட்டை கிருஷ்ணாபுரம் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில், 10 மாதங்களாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில், கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது.

குறிப்பாக, குடியிருப்பு களில் உள்ள கழிவுநீர் தொட்டிகள் நிரம்பி, அப்பகுதிகளில் மக்கள் வசிக்க முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால், குடியிருப்புகளில் இருந்து கழிவுநீரை வெளியேற்ற முடியாமல் சிரமம் ஏற்படுகிறது.

இதுகுறித்து புகார் அளித்தால், 'இப்பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடப்பதால் கழிவுநீர் பிரச்னை உள்ளது. எங்களால் எதுவும் செய்ய முடியாது' என, குடிநீர் வாரிய அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளிப்பதாக, அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அவர்கள் கூறியதாவது:

கழிவுநீர் பிரச்னை குறித்து தெரிவித்தபோது, பணியாளர்கள் சாலையில் ஆய்வு செய்தனர். பின், சாலை பகுதியில் எந்த பிரச்னையும் இல்லை. குடியிருப்புக்குள் தான் பிரச்னை உள்ளது என்றனர்.

இதனால், மூன்று பணியாளர்களை வைத்து, பிரதான கால்வாயை அடைத்தப்பின், குடியிருப்புகளில் உள்ள கழிவுநீர் தொட்டி, குழாய்கள் போன்றவற்றை சுத்தம் செய்தோம். இதற்காக, 25,000 ரூபாய் செலவிட்டுள்ளோம். அதன்பின் தீர்வு ஏற்படுமா என காத்திருந்தோம்.

ஆனால், அடுத்த சில நாட்களில், குடியிருப்பில் இருந்து கழிவுநீர் செல்லாமல், கழிவுநீர் தொட்டிகளில் மீண்டும் நிரம்பியது. இவற்றால், குடியிருப்புகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் பொறுப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள் உடையது.

அவர்கள் அலட்சியமாக இருப்பது, இப்பகுதியில் உள்ள மக்களுக்கு வேதனையாக உள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர், அமைச்சர்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அப்பகுதி மக்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us