Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/பயணியரின்றி கோயம்பேடு பஸ் நிலையம்... வெறிச்! கிளாம்பாக்கம், மாதவரத்தில் தொடரும் குழப்பம்

பயணியரின்றி கோயம்பேடு பஸ் நிலையம்... வெறிச்! கிளாம்பாக்கம், மாதவரத்தில் தொடரும் குழப்பம்

பயணியரின்றி கோயம்பேடு பஸ் நிலையம்... வெறிச்! கிளாம்பாக்கம், மாதவரத்தில் தொடரும் குழப்பம்

பயணியரின்றி கோயம்பேடு பஸ் நிலையம்... வெறிச்! கிளாம்பாக்கம், மாதவரத்தில் தொடரும் குழப்பம்

ADDED : ஜன 31, 2024 12:06 AM


Google News
Latest Tamil News
அனைத்து பேருந்துகளும் முழுமையாக கிளாம்பாக்கம் மற்றும் மாதவரத்திற்கு மாற்றப்பட்டதால், சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் நேற்று வெறிச்சோடியது. மாதவரத்தில் இருந்து தென்மாவட்டங்கள் சென்ற பேருந்துகள், சென்னையை கடப்பதற்குள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறின. கிளாம்பாக்கத்தில் இருந்து செல்வோரும் தொடர்ந்து சிரமத்தை சந்திப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் படிப்படியாக கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டன. கோயம்பேடில் இருந்து இயக்கப்பட்ட மொத்த பேருந்துகளில் 80 சதவீதம், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

மீதமுள்ள 20 சதவீத பேருந்துகள், 2018 அக்டோபரில் திறக்கப்பட்ட மாதவரம் புறநகர் நிலையத்திற்கு நேற்று மாற்றப்பட்டன. இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயக்கப்படும், 454 பேருந்துகள் மட்டும் கோயம்பேடில் இருந்து இயக்கப்படுகின்றன.

இதனால், எப்போதும் களைகட்டி காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம், வெறிச்சோடி காணப்படுகிறது.

மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து, செங்குன்றம் வழியாக தடா, நெல்லுார், காளஹஸ்தி, திருப்பதி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு, ஆந்திரா மாநில பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சுற்றுவட்டார பயணியரின் வசதிக்காக, அங்கிருந்து திருப்பதிக்கு தினமும், தமிழக அரசின் 90 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், கோயம்பேடில் இருந்து மாதவரத்திற்கு மாற்றப்பட்ட பேருந்துகளை, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ., சுதர்சனம் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.

மாதவரத்தில் இருந்து திருச்சி, சேலம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கும்பகோணம், சிதம்பரம், நெய்வேலி, கடலுார், புதுச்சேரி, திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி ஆகிய இடங்களுக்கு தினமும், 5 முதல் 20 சர்வீஸ் வரை, 160 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து, அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி:

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இங்கிருந்து திருச்சிக்கு 110 பேருந்துகள், சேலம் - 66, விருத்தாசலம் - 30 கள்ளக்குறிச்சி - 50 விழுப்புரம் - 59, கும்பகோணம் - 52, சிதம்பரம் - 21, நெய்வேலி - 46, புதுச்சேரி வழியாக கடலுாருக்கு - 32.

திண்டிவனம் வழியாக புதுச்சேரி - 35, செஞ்சி வழியாக திருவண்ணாமலை - 135, போளூர் - 30, வந்தவாசி - 46 என, 710 நடைகளில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேருந்தின் நிலையத்தில் வெளியே தற்காலிகமாக, 135 ஆம்னி பேருந்துகளை, நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

பேருந்து இயக்கம் மற்றும் பயணியரின் தேவைக்கேற்ப அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.

கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடுக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், தாம்பரத்திற்கு இரண்டு நிமிடத்திற்கு ஒரு பேருந்தும் இயக்கப்படுகின்றன.

ஆம்னி பேருந்து தொழிலாளர்களுக்கு ஓய்வெடுத்து, குளித்து, புறப்படுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு ஏ.டி.எம்., மையங்கள், மலிவு விலை உணவகம் அமைக்கப்பட உள்ளன. திருமழிசை குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் போது, பெங்களூரு செல்லும் பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

'மாதவரத்தில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், கொளத்துார் ரெட்டேரி சந்திப்பு, பாடி மேம்பாலம், அம்பத்துார் தொழிற்பேட்டை வழியாக, மதுரவாயல் - தாம்பரம் புறவழிச்சாலையில் பயணிக்கும்' என, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர்.

மாதவரம் முதல் கொளத்துார் சந்திப்பு வரை, மெட்ரோ ரயில் பணிகள் நடக்கின்றன. பாடி முதல் அம்பத்துார் தொழிற்பேட்டை வரையிலும், ஏற்கனவே கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால், மேற்கண்ட சாலைகளில் பேருந்துகளை இயக்கியதால், அனைத்து வகை வாகனங்களும் நெரிசலில் சிக்கி, ஊர்ந்து செல்வதாக அப்பகுதியினர் குற்றஞ்சாட்டினர்.

தொடரும் குழப்பம்


தென் மாவட்ட அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளைத் தொடர்ந்து, விழுப்புரம், கும்பகோணம் போக்குவரத்து கழகங்கள் சார்பில், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் பேருந்துகளில் 80 சதவீத பேருந்துகள், நேற்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டன.

புதிதாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணியர் கடும் குழப்பத்தில் சிக்கினர். கிளாம்பாக்கம் சென்று, அங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்வதில் கடும் சிரமத்தை சந்திப்பதாக அவர்கள் குமுறினர்.

இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கும், கிளாம்பாக்கத்திற்கும் இடையே, மாநகர பேருந்துகளும் தேவையான அளவுக்கு இயக்க வேண்டும். அதேபோல, நகரின் பிற பகுதிகளை இணைக்கும் வகையிலும் பேருந்துகளை இயக்க வேண்டும்.

புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில், குறித்த நேரத்தில் சென்ட்ரலுக்கும், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல முடியும். ஆனால், கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னைக்குள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றடைவதற்கான நேரத்தை கணிக்க முடியாத நிலை நீடிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரிகள் புலம்பல்


கிளாம்பாக்கத்தில் பேருந்து பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது.

போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

கிளாம்பாக்கத்திற்கு அனைத்து பேருந்துகளையும் உடனே மாற்றுவர் என எதிர்பார்க்கவில்லை.

தென்மாவட்டங்களைத் தவிர, வடமாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் 50 சதவீதம் கோயம்பேடில் இருந்து தான் இயக்குவர் என எதிர்பார்த்தோம். தற்போது, உடனடியாக எல்லா பேருந்துகளையும் மாற்றம் செய்வது, பயணியரிடம் அதிருப்தியை ஏற்படுத்தும். அவர்கள் நேரிடையாக எங்களிடம் தான் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

சரிந்த வியாபாரம்

எட்டு ஆண்டுகளாக இங்கு கடை வைத்துள்ளேன். மாதம் 50,000 ரூபாய் வாடகை செலுத்துகிறேன். தினமும் 30,000 ரூபாய் வியாபாரம் நடந்த நிலையில், தற்போது 5,000 ரூபாய்க்கு கூட நடப்பதில்லை. இங்கு கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் கடை வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.

கே.முகேஷ், 29, வியாபாரி,

கோயம்பேடு பேருந்து நிலையம்.

நெல்லை,

தஞ்சைக்கு

பஸ் வசதி தேவை

-மாதவரத்தில் இருந்து, தென் மாவட்டத்திற்கான பேருந்து வசதி வரவேற்புக்குரியது தான். ஆனால், வடசென்னையின் சுற்றுவட்டாரங்களில் மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் மற்றும் வியாபாரிகள் வசிக்கின்றனர். அவர்கள், இங்கிருந்து குடும்பத்துடன் கிளாம்பாக்கம் சென்று பேருந்து பிடிப்பதில், நிறைய சிரமம் உள்ளது. அதற்காக, சில பேருந்துகளை மாதவரத்தில் இருந்து இயக்க அரசு முன்வர வேண்டும்.

- எல்.காமராஜ், 50,

செங்குன்றம்.

விழிபிதுங்கும் நெரிசல்

மாதவரத்தில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து வசதி கிடைத்தாலும், மாதவரம் ரவுண்டானா மேம்பாலத்தை கடந்து செல்வது சவாலாக உள்ளது. மேம்பாலத்தையொட்டி, 200 அடி சாலையில், மெட்ரோ ரயில் திட்ட பணி, உயர் மின் அழுத்த கேபிள் பதிக்கும் பணி, குடிநீர், கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகளால், போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. மேலும், வடசென்னை மற்றும் எண்ணுார், மீஞ்சூர் துறைமுகங்களில் இருந்து, சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்களும், மாதவரத்தை கடந்து செல்கின்றன. இதனாலும் நெரிசல் அதிகரித்துள்ளது.

துறைமுகங்களுக்கு சென்று வரும் வாகனங்களை, மணலி வழியாக வண்டலுார் - -மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக செல்ல, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

து.சண்முகம், 51, லட்சுமிபுரம்.

*களையிழந்த கோயம்பேடு

கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலுார், சிதம்பரத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள், பூந்தமல்லி வழியாக வேலுார், திருப்பத்துார், ஓசூர், கிருஷ்ணகிரி தருமபுரி, திருப்பதி, சித்துார் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் 454 பேருந்துகள் மட்டுமே, தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.இதனால், எப்போதும் களைகட்டி காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம், வெறிச்சோடி காணப்படுகிறது.



வழிகாட்டி கையேடு வெளியீடு

கோயம்பேடில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்படும் நடைமேடை விபரம் குறித்து, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் குழப்பம் நீடிப்பதால், நடைமேடைகள் விபரம் அடங்கிய வழிகாட்டி கையேடு, சி.எம்.டி.ஏ., சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கையேட்டின் அச்சு பிரதியையும் வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல மாதவரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நேரம் உள்ளிட்ட விபரங்களையும், சி.எம்.டி.ஏ., மற்றும் போக்குவரத்து கழகங்கள் வெளியிட்டுள்ளன.



பஸ் பாஸ்

கவுன்டர் கிளாம்பாக்கம் புது பேருந்து முனையத்தில் நாளை முதல், மாநகர் போக்குவரத்துக் கழக மாதாந்திர 'பஸ் பாஸ் கவுன்டர்' செயல்பட உள்ளது. இந்த கவுன்டரில் 1,000 ரூபாய் பயண அட்டை, மாதாந்திர சலுகை பயண அட்டை, மாணவர்களுக்கான 50 சதவீத சலுகை பயண அட்டை உள்ளிட்டவற்றை பெற்றுக் கொள்ளலாம்.



- நமது நிருபர் குழு -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us