Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தடைக்காலம் முடிந்ததால் காசிமேடு மீனவர்கள் 'குஷி' ஆழ்கடலில் மீன்பிடிக்க விரைந்த விசைப்படகுகள்

தடைக்காலம் முடிந்ததால் காசிமேடு மீனவர்கள் 'குஷி' ஆழ்கடலில் மீன்பிடிக்க விரைந்த விசைப்படகுகள்

தடைக்காலம் முடிந்ததால் காசிமேடு மீனவர்கள் 'குஷி' ஆழ்கடலில் மீன்பிடிக்க விரைந்த விசைப்படகுகள்

தடைக்காலம் முடிந்ததால் காசிமேடு மீனவர்கள் 'குஷி' ஆழ்கடலில் மீன்பிடிக்க விரைந்த விசைப்படகுகள்

ADDED : ஜூன் 16, 2025 02:38 AM


Google News
Latest Tamil News
சென்னை:மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வந்ததால், காசிமேடில் ஓய்வெடுத்து வந்த விசைப்படகுகள் நேற்று அதிகாலை ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றன. மீன் வகைகள் அதிகம் கிடைக்கும் என்பதால், மீனவர்கள், 'குஷி' அடைந்துள்ளனர்.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட கிழக்கு கடலோரப் பகுதிகளில், மீன் உள்ளிட்ட கடல் உயிரிகளின் இன விருத்தியை கருத்தில் வைத்து, ஆண்டுதோறும், 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

தடைக்காலம்


இதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம், ஏப்., 15ல் துவங்கியது. தடை காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 1,200 விசைப்படகுகள் உட்பட, மாநிலம் முழுதும், 20,000த்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரங்களில் நங்கூரமிடப்பட்டு இருந்தன.

மீன்பிடி தடைக்காலம், நேற்று முன்தினம் நள்ளிரவில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, ஆழ்கடல் மீன்பிடி தொழிலை துவக்க, மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

இரண்டு நாட்களாக ஆழ்கடலில் மீன்பிடித்தலுக்கு தேவையான ஆயத்த பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். மீன் வகைகளை பதப்படுத்த தேவையான ஐஸ் கட்டிகள் விசைப்படகுகள் உள்ள கலன்களில் அடுக்கப்பட்டன.

நேற்று அதிகாலை 5:00 மணி முதல், 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றன.

நம்பிக்கை


இதுகுறித்து, விசைப்படகு உரிமையாளர்கள் கூறியதாவது:

தடைக்காலம் முடிந்து மீனவர்கள் நேற்று காலை மகிழ்ச்சியுடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

ஒவ்வொரு படகிலும், 15 நாட்கள் தங்கி மீன்பிடிக்கும் வகையில், 6,500 லிட்டர் டீசல், 170 டன் ஐஸ் பார், 12,000 லிட்டர் தண்ணீர், 15 நாள்களுக்கு தேவையான மளிகை பொருள்கள் என, ஏழு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து படகுகளை மீன்பிடிக்க கடலுக்குள் அனுப்பி உள்ளோம்.

மீன் வகைகள் அதிகம் உற்பத்தியாகி இருக்கும்; பெரிய பெரிய மீன்களும் கிடைக்கும் என்பதால், நல்ல லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

தற்போது கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் துவங்க உள்ளதால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.

காசிமேடு துறைமுகத்தில் ஐஸ் கட்டிகள் தட்டுப்பாடு காரணமாக, நாளை, நாளை மறுநாள் தலா, 250க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்ல உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடரும் விலை உயர்வு


விடுமுறை நாளான நேற்று, காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு, மீன் வாங்க அசைவ பிரியர்கள் அதிகம் குவிந்தனர். ஆனால், தடைக்காலம் முடிந்து விசைப்படகுகள் நேற்று அதிகாலைதான் கடலுக்குள் சென்றுள்ளன.

இந்த படகுகள் கரை திரும்ப ஒரு வாரம் வரை ஆகலாம்.

நேற்று, சிறு படகுகள் வாயிலாக பிடித்து வரப்பட்ட மீன் வகைகள் மட்டுமே விற்கப்பட்டன. குறைந்த மீன் வரத்து, வாங்க குவிந்த கூட்டம் காரணமாக, மீன் விலை வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது. மீன் பிரியர்கள் பலர் விலை உயர்வால் மீன் வாங்காமல் திரும்பிச் சென்றனர். மீன் விலை குறைய இன்னும் ஒரு வாரம் ஆகலாம்.

மீன் விலை நிலவரம்


மீன்வகை கிலோ (ரூ.)
வஞ்சிரம் 1,400 -- 1,500
சீலா 650 - 700
பர்லா 300 - 350
பாறை 600 - 700
மத்தி 250 - 300
கிளிச்ச 200 - 250
நெத்திலி 300 - 400
சங்கரா 650 - 700
கறுப்பு வவ்வால் 1100 - 1200
கடல் விரால் 850 - 900
இறால் 500 - 700
டைகர் இறால் 1,300 - 1,500
நண்டு 400 - 500







      Our Apps Available On




      Dinamalar

      Follow us