ADDED : மே 11, 2025 12:34 AM

சென்னை, ஓ.எம்.ஆர்., சோழிங்கநல்லுார், செயின்ட் ஜோசப் கல்லுாரியின் பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.
கல்லுாரியின் நிர்வாக இயக்குனர் பாபு மனோகரன் தலைமை தாங்கினார். மொத்தம், 3,420 பட்டதாரி மாணவ - மாணவியருக்கு, பட்டமும், கேடயமும் வழங்கப்பட்டது.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் சீதாராம் பேசியதாவது:
இந்திய இளைஞர்களின் அறிவு மற்றும் திறன்களை, உலக அளவிலான தொழில்நுட்ப நிறுவனங்கள், வியப்புடன் பார்க்கின்றன.
குறிக்கோளுடன் படித்தால், தொழில் சார்ந்த நினைத்த இலக்கை அடைய முடியும். அதற்கான அறிவை, இன்றைய கல்வி உங்களுக்கு வழங்குகிறது.
படிப்பை கடந்து, தனித்திறன் மீது கவனம் செலுத்தினால், படிப்பு முடிந்தபின் அவை பேருதவியாக இருக்கும்.
அறிவியல், சுகாதார துறைகளில் புதுமைகள் படைத்தால், அவை தனி கவனம் பெறுகிறது. அதற்கு ஏற்ப, உங்களை புதுப்பித்து கொள்வது அவசியம்.
அடிப்படை பட்டப்படிப்பை கற்று, அதற்கான வேலை போதும் என முடங்கி விடக்கூடாது. வேலை பார்த்துக்கொண்டே படிக்க பல படிப்புகள் உள்ளன.
இந்தியா வளரும் நாடாக இருப்பதால், தொழிலில் அபார வளர்ச்சி அடைந்து வருகிறோம். எந்த துறையாக இருந்தாலும், அதில் தனி முத்திரை படைக்க முடியும். அதற்கு ஏற்ப திறன்களை வளர்த்து கொள்வது அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.