/உள்ளூர் செய்திகள்/சென்னை/விபத்து நடந்த இடத்தில் மீண்டும் விபத்தா?; போலீஸ் மீது பாய்கிறது நடவடிக்கைவிபத்து நடந்த இடத்தில் மீண்டும் விபத்தா?; போலீஸ் மீது பாய்கிறது நடவடிக்கை
விபத்து நடந்த இடத்தில் மீண்டும் விபத்தா?; போலீஸ் மீது பாய்கிறது நடவடிக்கை
விபத்து நடந்த இடத்தில் மீண்டும் விபத்தா?; போலீஸ் மீது பாய்கிறது நடவடிக்கை
விபத்து நடந்த இடத்தில் மீண்டும் விபத்தா?; போலீஸ் மீது பாய்கிறது நடவடிக்கை
UPDATED : மே 26, 2025 07:36 AM
ADDED : மே 26, 2025 01:38 AM

சென்னையில் நான்கு மாதங்களில் விபத்து நடந்துள்ள, 1,186 இடங்களில் மீண்டும் விபத்து நடக்காத வகையில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னையில் பெரும்பாலான சாலைகள் சீரமைக்கப்பட்டாலும், சேவைத் துறைகள் அவ்வப்போது தோண்டி, அவற்றை சேதப்படுத்துகின்றன. அவை உடனுக்குடன் சீரமைக்கப்படுவது இல்லை. பணிகள் முடிய பல மாதங்கள் ஆவதால், போக்குவரத்து பெரும் சிக்கலாகிவிடுகிறது.
தவிர, சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து சிக்னல்கள் சரி வர செயல்பாடாதது உள்ளிட்ட காரணங்களால், ஆங்காங்கே விபத்துக்களும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இந்தாண்டில் நான்கு மாதங்களில், 1,186 இடங்களில் விபத்துக்கள் நடந்துள்ளன. இந்த இடங்களில் மீண்டும் விபத்துக்கள் நடக்காத வகையில், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ள உத்தரவு:
* ஒவ்வொரு போக்குவரத்து ஆய்வாளரும், தங்கள் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் விபத்து ஏற்படும் வகையில், சாலைகளில் ஏதேனும் பள்ளம் உள்ளதா; அவ்வாறு தென்பட்டால் உடனே மாநகராட்சிக்கோ அல்லது நெடுஞ்சாலை துறைக்கோ சீரமைக்க கோரி கடிதம் அனுப்புங்கள்
* சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட விபத்து எதனால் ஏற்பட்டது; இனியும் தொடராத வகையில் எந்த மாதிரி நடவடிக்கைகளை எடுக்கலாம் என, அப்பகுதி போக்குவரத்து எஸ்.ஐ., கள ஆய்வு செய்ய வேண்டும்
* அதிவேகமாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என்றால், அவ்விடத்தில் வேகத்தடை அமைக்கவும், எச்சரிக்கை பதாகை அமைக்க வேண்டும்
* தொடர் விபத்து ஏற்படும் பகுதி என்றால், மெதுவாக செல்லவும் என விழிப்புணர்வு பதாகையும் அமைக்க வேண்டும்
* ஏற்கனவே சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட பகுதிகளில், விபத்துக்கள் நிகழாமல் தடுக்க, ஆய்வாளர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மதுபோதையில் ஒருவர் வாகனம் ஓட்டியதால் பெரும் விபத்து ஏற்பட்டால், அவர் புறப்பட்ட இடம் முதல் சம்பவ இடம் வரை ஆராயப்பட உள்ளது.
இடையில் வாகன தணிக்கை செய்ய தவறிய போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
- நமது நிருபர் -