Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஒரு பாட்டுக்கு மெட்டு போட ஒரு ஆண்டு எடுப்பது சாதனையா? இளையராஜா தகவல்

ஒரு பாட்டுக்கு மெட்டு போட ஒரு ஆண்டு எடுப்பது சாதனையா? இளையராஜா தகவல்

ஒரு பாட்டுக்கு மெட்டு போட ஒரு ஆண்டு எடுப்பது சாதனையா? இளையராஜா தகவல்

ஒரு பாட்டுக்கு மெட்டு போட ஒரு ஆண்டு எடுப்பது சாதனையா? இளையராஜா தகவல்

ADDED : ஜன 05, 2024 10:39 PM


Google News
Latest Tamil News
சென்னை:நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு இசையமைத்து முடித்து விட்டதாகவும், அதை வெளியிடும் சந்தர்ப்பத்திற்கு காத்திருப்பதாகவும், இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்து உள்ளார்.

ஜெயசுந்தர் எழுதிய, ஆண்டாள் திருப்பாவையை விவரிக்கும், 'மால்யதா' என்ற ஆங்கில நுால், நேற்று முன்தினம் சென்னையில் வெளியிடப் பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட, அதன் முதல் பிரதியை இளைய ராஜா பெற்றுக் கொண்டார்.

பின், இளையராஜா பேசியதாவது:

நான் சிவபக்தன். ஆனால், நான் எதற்கும் எதிரி அல்ல. என் தந்தை ராமசாமி, வைணவத்தில் தீவிரமாக இருந்தவர். அந்த விட்ட குறையோ, தொட்ட குறையோ இங்கே வந்திருக்கிறேன்.

திருவாசகத்திற்கு இசையமைத்தது, ஒலிப்பதிவு செய்தது போல, நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கும் இசையமைத்து, ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறேன். சரியான சந்தர்ப்பத்தில் வெளியிட காத்திருக்கிறேன்.

மாதம், 30 நாட்களும் எனக்கு முழுமையாக இருக்கும். காலையில் ஒரு பாடல்; மாலையில் ஒரு பாடல். காலை 7:00 முதல் பகல் 1:00 மணி வரை ஒரு 'கால்ஷீட்' இருக்கும்.

இப்போதெல்லாம் கால்ஷீட் கிடையாது. இரவு, பகலாக வேலை செய்கின்றனர். ஒரு பாடலுக்கு இசையமைத்து முடிக்க ஆறு மாதங்கள் ஆகின்றன. ஒரு ஆண்டு எடுத்துக் கொண்டு, சாதனை படைப்பவர்களும் இருக்கின்றனர். யாரையும் குறை சொல்வதற்காக இதை சொல்லவில்லை. அவர்களுக்கு வரவில்லை அவ்வளவு தான்.

ஒரே நாளில் மூன்று பாடல்களுக்கு இசையமைத்து உள்ளேன். மூன்று நாட்களில் மூன்று திரைப்படங்களுக்கு பின்னணி இசையை முடித்துக் கொடுத்திருக்கிறேன். இப்படி இசையமைத்தவர்கள் உலகில் யாரும் இல்லை.

ஓய்வுக்காக பவுர்ணமி தினத்தில், கோடி சுவாமியை தரிசிக்க செல்வேன். கன்னியாகுமரி கடற்கரையில் பித்து பிடித்தது போல திரிந்து கொண்டிருக்கும் மாயம்மாள் என்பவரையும் தரிசிப்பேன். பின், திருவண்ணாமலை வந்து, காட்டுப்பாதையில் கிரிவலம் செல்வேன்.

திருவண்ணாமலை சென்று வந்த பின், ஒரு நாள் வீட்டில் உறங்கி எழுந்ததும், திடீரென, 10 நிமிடங்களில் 10 பாடல்கள் எழுதினேன். அடுத்த நாள், 10 பாடல்கள் எழுதினேன். எனக்குள் வந்தது எழுதினேன்.

இதுபற்றி புலவர் நமச்சிவாயத்திற்கு போன் செய்து, 20 பாடல்கள் எழுதியதைச் சொன்னேன்.

அவர், 'மாணிக்கவாசகரும், 20 பாடல்கள் தான் எழுதினார். அவர் எழுதிய திருப்பள்ளியெழுச்சி பாடல்களையும் சேர்த்து திருவெம்பாவை என மார்கழியின், 30 நாட்களும் பாடுகின்றனர். நீங்களும் திருப்பள்ளியெழுச்சி எழுதி விடுங்கள்' என்றார்.

அதன்பின், அடுத்த நாளே திருப்பள்ளியெழுச்சி, 10 பாடல்கள் எழுதினேன். இப்படி நானும் திருவெம்பாவை எழுதினேன். இதை இதுவரை நான் எங்கும் சொன்னதில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us