/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தீவுத்திடல் கண்காட்சி 'பார்க்கிங்'கில் அதிகாரிகள் இடையூறு செய்ய தடை ஐகோர்ட் உத்தரவு தீவுத்திடல் கண்காட்சி 'பார்க்கிங்'கில் அதிகாரிகள் இடையூறு செய்ய தடை ஐகோர்ட் உத்தரவு
தீவுத்திடல் கண்காட்சி 'பார்க்கிங்'கில் அதிகாரிகள் இடையூறு செய்ய தடை ஐகோர்ட் உத்தரவு
தீவுத்திடல் கண்காட்சி 'பார்க்கிங்'கில் அதிகாரிகள் இடையூறு செய்ய தடை ஐகோர்ட் உத்தரவு
தீவுத்திடல் கண்காட்சி 'பார்க்கிங்'கில் அதிகாரிகள் இடையூறு செய்ய தடை ஐகோர்ட் உத்தரவு
ADDED : செப் 14, 2025 03:03 AM
சென்னை:'சென்னை தீவுத்திடலில், மெகா கண்காட்சிக்கு ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்த இடத்தில் எவ்வித இடையூறும் செய்யக் கூடாது' என, பொதுப்பணித் துறை, சென்னை மாநகராட்சி உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, வானகரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:
நவராத்திரி விழாவை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில், ஒவ்வொரு ஆண்டும் செப்., மற்றும் அக்., மாதங்களில் 30 நாட்கள் கண்காட்சி நடத்தப்படும்.
கண்காட்சி நடத்த 2 லட்சம் சதுர அடி இடம் ஒதுக்க கோரி, ஆக., 1ல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் மனு அளித்தேன்.
இதை ஏற்று, தாஜ்மகால் மற்றும் ஆப்ரிக்கா ஜங்கிள் சபாரி என்ற பெயரில் மெகா கண்காட்சி நடத்துவதற்கு, திறந்த வெளி நிலம் மற்றும் வாகன நிறுத்த இடம் என, மொத்தம் 2 லட்சம் சதுர அடி, ஆக., 8ல் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கு வாடகையாக, 1.04 கோடி ரூபாய் செலுத்தி உள்ளேன். இதுவரை, 3 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து, ஸ்டால்களை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கடந்த 11ம் தேதி மாநகராட்சி, பொதுப்பணித் துறை மற்றும் நீர்வளத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், கண்காட்சி வளாகத்துக்குள் நுழைந்து, வாகன நிறுத்துமிடத்தை அளவீடு செய்ததுடன், அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.
வாகன நிறுத்தத்துக்கும் சேர்த்து வாடகை தொகை செலுத்தியும் இடத்தைவிட்டு வெளியேறும்படி கூறுவது சட்ட விரோதமானது.
கண்காட்சி துவக்குவதற்கான பணிகளை முடித்த பின், 'பார்க்கிங்' பகுதியில் உள்ள கட்டமைப்பை அகற்றும்படி கூறுவதால், பெரும் இழப்பு ஏற்படும்.
ஒதுக்கீடு ஆணைப்படி, அக்., 31ம் தேதி வரை, வாகன நிறுத்த இடத்தை பயன்படுத்த அனுமதி கோரி, தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் மனு அளித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, கண்காட்சி முடியும் வரை, வாகன நிறுத்தத்துக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்த 1 லட்சம் சதுர அடியை பயன்படுத்த அனுமதி கோரி, கடந்த 11ம் தேதி அளித்த மனுவை பரிசீலிக்க, தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.
இதை ஏற்ற நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை, கண்காட்சியில் பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இடையூறு ஏற்படுத்தவோ அல்லது மாற்றி அமைக்கவோ கூடாது எனக்கூறி, சென்னை மாநகராட்சி, சுற்றுலா வளர்ச்சி கழகம், மாநகர கமிஷனர், பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு இடைக்கால உத்தர விட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.