ADDED : பிப் 12, 2024 02:17 AM
திருவொற்றியூர்:திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார், எல்லையம்மன் கோவில் சந்திப்பில், தலைகவசத்தின் பயன்பாடு குறித்து, நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தலைகவசம் அணியாமல், விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முறையாக, தலைகவசம் அணிந்து வந்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இது குறித்து, உதவி ஆய்வாளர் சாமுவேல் சிங் கூறுகையில், ''இருசக்கர வாகன ஓட்டிகள், அதிகளவில் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதற்கு, தலைகவசம் அணியாததும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
''வாகன ஓட்டி மட்டுமின்றி, பின் இருக்கையில் அமர்ந்திருப்பவரும், தலைகவசம் அணிய வேண்டும். 18 வயது நிரம்பாத சிறுவர்களை, இருசக்கர வாகனம் ஓட்ட பெற்றோர் பைக்குகளை ஓட்ட அனுமதிக்க கூடாது,'' என்றார்.