/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வெப்பத்தடுப்பு வசதி: ஐ.நா., பாராட்டு பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வெப்பத்தடுப்பு வசதி: ஐ.நா., பாராட்டு
பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வெப்பத்தடுப்பு வசதி: ஐ.நா., பாராட்டு
பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வெப்பத்தடுப்பு வசதி: ஐ.நா., பாராட்டு
பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வெப்பத்தடுப்பு வசதி: ஐ.நா., பாராட்டு
ADDED : ஜூன் 16, 2025 03:06 AM

சென்னை:சென்னை பெரும்பாக்கத்தில், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்ட, வெப்பத்தடுப்பு வசதிகளுக்கு, ஐ.நா., அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
உலகம் முழுதும் நகர்ப்புற வெப்பத்தடுப்பு நடவடிக்கைகளை, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட பிரிவு, பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, நகர்ப்புற பகுதி கட்டடங்களில் இருந்து வெளியேறும் வெப்பத்தை குறைப்பதற்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தில், 'லைட்ஹவுஸ்' என்ற தலைப்பில், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், முன்மாதிரி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இதன்படி, சென்னை பெரும்பாக்கத்தில், தரைதளத்துடன் ஐந்து தளங்களில், 1,152 வீடுகள் உடைய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது.
கடந்த, 2022ல் இத்திட்டத்தில் உள்ள வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டது. தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பாக இருந்தது.
வேறு எந்த திட்டத்திலும் இல்லாத வகையில், இந்த குடியிருப்பு கட்டடத்தில், தளத்தின் மேற்பகுதியில் வெப்பத்தடுப்பு பூச்சு மேற்கொள்ளப்பட்டது.
இதனால், சூரியனில் இருந்து வரும் வெப்பக்கதிர்கள், கட்டடத்தில் இறங்காமல் பிரதிபலிப்பு முறையில் திருப்பிவிடப்படும். இதற்காக, 'சிக்கா கூல் ரூப் பெயின்ட்' பயன்படுத்தப்பட்டது.
இதனால், சூரிய கதிர் பிரதிபலிப்பு அட்டவணையில், 102வது இடம் கிடைத்துள்ளது. கோடை காலத்தில் உச்சபட்ச சமயங்களில், இந்த கட்டடங்களின் உட்புற வெப்ப நிலை, 5 முதல் 8 டிகிரி செல்ஷியஸ் வரை குறைவாக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டது.
'கூல் ரூப்' என்ற பெயரிலான இந்த முயற்சி குறித்து, ஐ.நா., சுற்றுச்சூழல் திட்ட பிரிவு பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த விபரங்கள், யு.என்.இ.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.
கட்டுமான துறை வல்லுனர்கள் கூறியதாவது:
வெப்பக்கதிர் ஊடுருவாமல் பிரதிபலிப்பதற்காக, டைட்டானியம் டை ஆக்சைடு, பேரியம் சல்பேட் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உலோக ஆக்சைடுகள், வெப்பக்கதிர்களை ஊடுருவ விடாமல், பிரதிபலிக்கும் தன்மை உடையவை.
கான்கிரீட் தளத்தின் மேல் இதை பூசும்போது, வெப்பக்கதிர் பிரதிபலிக்க வைப்பதால், வீட்டிலும் வெப்பத்தாக்கம் குறைகிறது. மேலும், இந்த நடைமுறையால் தளத்தின் ஆயுள் அதிகரிக்கவும் வழி ஏற்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.