Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் சப்ளை குழாய்களில் அளவிடும் கருவிகள் பொருத்தம்

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் சப்ளை குழாய்களில் அளவிடும் கருவிகள் பொருத்தம்

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் சப்ளை குழாய்களில் அளவிடும் கருவிகள் பொருத்தம்

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் சப்ளை குழாய்களில் அளவிடும் கருவிகள் பொருத்தம்

ADDED : ஜூன் 22, 2024 05:35 PM


Google News
சென்னை:

சென்னையில் வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர் அளவு மீட்டர்கள் பொருத்தப்படும் எனவும், கழிவுநீர் உந்து நிலையங்களில் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த, 50 கோடி ரூபாயில் நவீன உபகரணங்கள் நிறுவப்படும் எனவும், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சட்டசபையில் நேற்று, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

நுாறு ஆண்டுகள் பழமையான, கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து, செயல்திறனை அதிகரிக்க, திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றும் கட்டமைப்புகளை உருவாக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து, மாதவரம் குடிநீர் உந்து நிலையத்திற்கு செல்லும் மத்திய பிரதான குடிநீர் குழாய் 40 கோடி ரூபாயில் புதிதாக அமைக்கப்படும்.

சென்னை குடிநீர் வாரியத்தில் நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத அசையா சொத்துக்களை கணக்கெடுத்து வருவாயை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.

குடிநீர் அளவுமானி கொள்கை 2022ன்படி, சென்னை மாநகரில் உள்ள ஒரு லட்சம் வணிக நிறுவனங்கள், பல மாடி குடியிருப்பு வளாகங்கள், வணிகத்துடன் கூடிய குடியிருப்புகளில் தனியார் பங்களிப்புடன், குடிநீர் பயன்பாட்டை அளவிடும் கருவிகள் பொருத்தப்படும்.

சென்னை அடையாறு, திருவான்மியூரில் உள்ள குடிநீர் வினியோக நிலையங்களில் இருந்து 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய, பழுதடைந்த குழாய்கள் மாற்றப்படும். விடுபட்ட இடங்களில் புதிய குழாய்கள் அமைக்கப்படும். குடிநீர் இணைப்புகளில் அளவு மீட்டர்கள் பொருத்தப்படும்.

சென்னையில் உள்ள 342 கழிவுநீர் உந்து நிலையங்களில் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த 50 கோடி ரூபாயில் நவீன உபகரணங்கள் நிறுவப்படும்.

தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்திலிருந்து, புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை நேரடியாக எடுத்துச் செல்ல 31 கோடி ரூபாயில் குழாய்கள் அமைக்கப்படும்.

சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளில் நிறைவேற்றப்பட்ட அனைத்து குடிநீர் திட்டங்களையும் மறுசீரமைப்பு செய்து, 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். இதில் முகலிவாக்கம் குடிநீர் வழங்கல் திட்டம், முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us