ADDED : ஜூன் 17, 2025 12:31 AM
பெரம்பூர் பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள 'ஸ்ரீ சிந்து பவன்' ஹோட்டலில், நேற்று இரவு 7:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
ஹோட்டல் பின்புறம் உள்ள முகமதியர் தெருவாசிகள், அவர்களின் வீடுகளின் மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்தனர்.
அதேவேளை, ஹோட்டலுக்கு சாப்பிட சென்றவர்களும், ஊழியர்களும் அலறியடித்து வெளியே வந்தனர். சிறிது நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஊழியர்கள் கூறுகையில், 'எண்ணெய் சட்டியில் இருந்த எண்ணெயில் தீப்பற்றியதால் விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை. முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது' என்றனர்.
பகுதி மக்கள் கூறுகையில், 'இந்த ஹோட்டலில், தீ விபத்து ஏற்படுவது இது நான்காவது முறை. போதிய பாதுகாப்பு விஷயங்களை ஹோட்டல் நிர்வாகம் பின்பற்ற, சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
இது குறித்து செம்பியம் போலீசார் விசாரித்தனர்.