/உள்ளூர் செய்திகள்/சென்னை/'திரைப்படங்கள் நாவல்களாக மாற வேண்டும்''திரைப்படங்கள் நாவல்களாக மாற வேண்டும்'
'திரைப்படங்கள் நாவல்களாக மாற வேண்டும்'
'திரைப்படங்கள் நாவல்களாக மாற வேண்டும்'
'திரைப்படங்கள் நாவல்களாக மாற வேண்டும்'
ADDED : ஜன 13, 2024 12:13 AM

சென்னை புத்தகக் காட்சியில், 'திரைத்துறையில் வாசிப்பின் சலனங்கள்' எனும் தலைப்பில், நடிகர் பொன்வண்ணன் பேசியதாவது:
இந்திய சினிமா வரலாற்றின் முதல் 30 ஆண்டுகளில், இதிகாசங்கள், காப்பியங்கள் மற்றும் புராணக் கதைகளே திரைப்படங்களாக உருவாக்கப்பட்டன. அதன் பின்னரே, சினிமாவுக்கென கதைகள் உருவாக்கப்பட்டன.
கடந்த 50 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில், 10,000 திரைப்படங்களுக்கும் மேல் வெளியாகி இருந்தாலும், இலக்கியங்களை வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களின் எண்ணிக்கை 200க்கும் குறைவாகவே உள்ளன. இது வருந்தத்தக்கது.
வங்காளத்தில், வாசிப்பின் சலனமாக திரைப்படங்கள் உள்ளன. அதன் தாக்கம் மலையாள மொழிப் படங்களிலும் உள்ளது. ஆனால், தமிழில் அப்படி இல்லை.
இங்கு திரைப்படங்களுக்கென்றே தனியாக கதைகள் உருவாக்கப்படுகின்றன. இதற்கு நிறைய காரணங்களும் உள்ளன.
ஓர் இலக்கியம், திரைப்படமாக உருவாகும்போது, அந்தத் திரைப்படமும் இலக்கியமாக மிளிர வேண்டும். இவ்விஷயத்தில் நிறைய முரண்கள் இருப்பதாலேயே, தமிழ் திரைத்துறையில், வாசிப்பின் சலனமாக திரைப்படங்கள் மாறுவதில்லை.
கொத்தமங்கலம் சுப்புவால் எழுதப்பட்ட 'தில்லானா மோகனாம்பாள்' நாவல், திரைப்படமாக மாறியபோது, நாவலின் உண்மைத் தன்மை, யதார்த்தம் சற்றும் மாறவில்லை.
ஆனால், பல நாவல்களை படமாக்கியதில் அதிகளவு கற்பனையை சேர்த்ததால் எடுபடவில்லை. இதனால், நாவலை வாசித்தபோது இருந்த அழுத்தம், திரைப்படத்தில் காணாமல் போய்விடுகிறது.
வருங்காலங்களில், பல்வேறு நாவல்கள், அவற்றின் உண்மைத் தன்மை மாறாமல், திரைப்படமாக உருவாக்கப்பட வேண்டும். அதுபோல், திரைப்படங்களும் நாவல்களாக வெளிவர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.