Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/அரிசி ஆலைகளின் உமி கழிவுகளால் செங்குன்றத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு

அரிசி ஆலைகளின் உமி கழிவுகளால் செங்குன்றத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு

அரிசி ஆலைகளின் உமி கழிவுகளால் செங்குன்றத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு

அரிசி ஆலைகளின் உமி கழிவுகளால் செங்குன்றத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு

ADDED : ஜன 13, 2024 12:16 AM


Google News
Latest Tamil News
செங்குன்றம்செங்குன்றம், வடகரை, தண்டல் கழனி, கிராண்ட் லைன், தீர்த்தகிரையம்பட்டு, புள்ளிலைன், பாடியநல்லுார் ஊராட்சிகளில், 80க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. அவற்றில், சில அரிசி ஆலைகளில், நெல் அவிப்பதற்கான, பாய்லர் அடுப்புகளில், பெரிய விறகுகள் எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், சில அரிசி ஆலைகளில், மொத்த பயன்பாட்டில், ஒரு பங்கு விறகும், இரண்டு மடங்கு உமியும் பயன்படுத்தப்படுகிறது. உமி எரிக்கப்பட்டு, வெளியாகும் உலர் சாம்பல் திறந்தவெளியில் குவித்து வைக்கப்படுகிறது.

அப்போது அவை, காற்றில் பறந்து, சுற்றுவட்டாரங்களில் வீடு, கடைகளிலும், அவற்றில் பயன்படுத்தப்படும் உணவு, குடிநீர் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள், வாகனங்கள் மீதும் படிந்து, சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

கதவு, ஜன்னல், வாகனம் உள்ளிட்ட பொருட்கள் மீது படிந்தால், எளிதில் துடைத்து விடலாம். ஆனால், உணவுப்பொருள் மற்றும் துவைத்து காய வைத்திருக்கும் உடைகளிலும் படிந்து, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

இதனால், வீட்டின் ஜன்னல், கதவுகளை திறந்த வைக்க முடியாமல், பலர் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து, அரிசி ஆலை உரிமையாளர்களிடம் புகார் செய்தால், இனி வராமல் பார்த்துக்கொள்கிறோம் என, நழுவி விடுகின்றனர்.

ஆனால், பல ஆயிரம் கிலோ அளவு, நெல் அவிக்க, விறகுகள் வாங்கி பயன்படுத்தினால், அதிகம் செலவாகும் என்பதால், உமியை வாங்கி எரிபொருளாக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

இது குறித்து, பாதிக்கப்படும் பொதுமக்கள், ஊராட்சி மன்ற நிர்வாகத்திடமும், அந்த நிர்வாகம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் செய்வது வழக்கமாகி விட்டது.

இந்த பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

விபத்து அபாயம்


அரிசி ஆலைகளில், எரிபொருளாக பயன்படுத்தப்படும், 'உமி' திறந்த வெளியில் குவித்து வைக்கப்படுகிறது.

அவை காற்றில் பறந்து, சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கண்ணில் விழுகிறது. இதனால் விபத்து அபாயம் ஏற்படுத்துகிறது.

இதனால், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், இந்த பிரச்னைக்கு தீர்வு காண, நேரடி ஆய்வு செய்ய வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us