/உள்ளூர் செய்திகள்/சென்னை/கழிவுநீர் குழாயில் வடிகட்டி அமைக்காததால் வாரியம்...திணறல்!:வீடுகள், வணிக கட்டடங்கள் தொடர்ந்து அத்துமீறல்கழிவுநீர் குழாயில் வடிகட்டி அமைக்காததால் வாரியம்...திணறல்!:வீடுகள், வணிக கட்டடங்கள் தொடர்ந்து அத்துமீறல்
கழிவுநீர் குழாயில் வடிகட்டி அமைக்காததால் வாரியம்...திணறல்!:வீடுகள், வணிக கட்டடங்கள் தொடர்ந்து அத்துமீறல்
கழிவுநீர் குழாயில் வடிகட்டி அமைக்காததால் வாரியம்...திணறல்!:வீடுகள், வணிக கட்டடங்கள் தொடர்ந்து அத்துமீறல்
கழிவுநீர் குழாயில் வடிகட்டி அமைக்காததால் வாரியம்...திணறல்!:வீடுகள், வணிக கட்டடங்கள் தொடர்ந்து அத்துமீறல்
ADDED : ஜூலை 08, 2024 01:16 AM

சென்னையில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காணாமல் இருப்பதற்கு, அடுக்குமாடி மற்றும் வணிகம் சார்ந்த கட்டடங்களில் உள்ள கழிவுநீர் இணைப்புகளில், 'சேம்பர்' என்ற வடிகட்டி அமைக்காதது முக்கிய காரணம் என்பது தெரிய வந்துள்ளது. வடிகட்டி அமைக்காத கட்டடங்கள் மீது, அபராதம் விதிப்பு நடவடிக்கை எடுக்க முடியாததால், புதிதாக சட்டம் இயற்ற, வாரிய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை குடிநீர் வாரியத்தில், 13.35 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. தினமும், 106 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. இதில், 70 கோடி லிட்டர் கழிவுநீராக வெளியேறுகிறது.
இந்த கழிவுநீர், 321 உந்து நிலையங்களில் சேர்ந்து, அங்கிருந்து 21 இடங்களில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. இதில், இரண்டு மற்றும் மூன்றாம் நிலைகளில் சுத்திகரிக்கும் நீரை, தொழிற்சாலைகளுக்கு வழங்குவதுடன், ஏரியில் விடப்படுகிறது; மீதமுள்ள நீர் கடலில் விடப்படுகிறது. இதற்காக, 5,500 கி.மீ., நீளத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை அகற்ற, 1.35 லட்சம் இயந்திர நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழாயில் அடைப்பு ஏற்படாமல், நீரோட்டம் சீராக இருந்தால் தான் கழிவுநீர் பிரச்னை ஏற்படாது.
ஆனால், குடிநீர் வாரியத்தில் கழிவுநீர் பிரச்னை என, தினமும் 500க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின்றன. கடந்த மூன்று மாதங்களில், இப்புகார்கள் அதிகளவில் பதிவாகின்றன.
குழாய் அடைப்பை சரி செய்ய, 300க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டும், பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிகம் சார்ந்த கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் என, அதிகாரிகள் கூறுகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், விடுதிகள், திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் என, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன.
இந்த கட்டடங்களில் இருந்து செல்லும் கழிவுநீர் குழாய், தெரு குழாயில் உள்ள இயந்திர நுழைவாயிலில் இணைக்கப்படும். கட்டடத்தில் இருந்து செல்லும் குழாயில், சேம்பர் என்ற வடிகட்டி அமைக்க வேண்டும்.
கழிவுநீருடன் வரும் திடக்கழிவுகள், வடிகட்டியில் தங்கி, கழிவுநீர் மட்டும் தெருக்குழாயில் சேர வேண்டும். வடிகட்டியில் தங்கிய கசடுகளை, அந்தந்த கட்டடங்களின் உரிமையாளர்கள் தினமும் இரவு வெளியேற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
ஆனால், 50 சதவீத வணிக கட்டடங்களில் வடிகட்டி இல்லை என்பது தெரிய வந்துள்ளது. வடிகட்டி அமைத்துள்ள 40 சதவீத கட்டடங்களில் முறையான பராமரிப்பு இல்லை. மீதமுள்ள 10 சதவீத கட்டடங்களில் முறையாக பராமரிப்பதாக தெரிய வருகிறது.
வடிகட்டி அமைக்காத மற்றும் முறையாக பராமரிக்காத கட்டடங்களில், இயந்திர நுழைவாயில் வழியாக பொங்கி வெளியேறும் கழிவுநீர், குடியிருப்பு வளாகங்கள், தெருக்களில் தேங்கி, தொற்று பாதிப்புடன் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
டெங்கு, மலேரியா போன்ற நோய் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தண்ணீரை கையாள்வது, வடிகாலில் கழிவுநீரை விடுவது போன்ற சுகாதாரப் பிரச்னைகளுக்கு, மாநகராட்சி சுகாதாரத் துறையால் அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது.
அது போன்ற நடைமுறை குடிநீர் வாரியத்தில் இல்லை. மாறாக, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, 'சீல்' வைப்பு போன்ற நடவடிக்கைகளே உள்ளதால் திணறி வருகின்றனர்.
வரி செலுத்தாவிட்டால் உடனே இணைப்பு துண்டிப்பு, சீல், ஜப்தி நடவடிக்கை எடுக்கும் வாரியம், வடிகட்டி அமைக்காத, பராமரிக்காத கட்டட உரிமையாளர்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், தொற்று நோய் பாதிக்காமல், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் பொறுப்பு வாரியத்திற்கும் உள்ளது.
கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண, வடிகட்டி அமைக்காத, பராமரிக்காத கட்டட உரிமையாளர்கள் மீது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சட்டம் தேவை
வடிகட்டிகளை முறையாக பராமரிக்காததால், கழிவுநீர் பிரச்னை அதிகரிப்பது உண்மை தான். பராமரிக்காத உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கலாம். இதற்கு, எங்களுக்கு அதிகாரம் வழங்கவில்லை. இணைப்பை துண்டித்தால், கழிவுநீர் பிரச்னை வேறு வடிவில் வரும். சமீபத்தில் நீர்நிலைகளில் கழிவுநீர் கொட்டும் லாரிகள் மீது அபராதம் விதிக்க சட்டம் இயற்றப்பட்டது. அதுபோல், வடிகட்டி பிரச்னைக்கும் அபராதம் விதித்து, கட்டடத்திற்கு 'சீல்' வைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
- குடிநீர் வாரிய அதிகாரிகள்
- நமது நிருபர் - -