Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ புழுதிவாக்கத்தில் வடிகால்வாய் பணி 2 ஆண்டாக கிடப்பில் உள்ள அவலம்

புழுதிவாக்கத்தில் வடிகால்வாய் பணி 2 ஆண்டாக கிடப்பில் உள்ள அவலம்

புழுதிவாக்கத்தில் வடிகால்வாய் பணி 2 ஆண்டாக கிடப்பில் உள்ள அவலம்

புழுதிவாக்கத்தில் வடிகால்வாய் பணி 2 ஆண்டாக கிடப்பில் உள்ள அவலம்

ADDED : மார் 21, 2025 12:37 AM


Google News
புழுதிவாக்கம், பெருங்குடி மண்டலம், வார்டு- 186க்கு உட்பட்டது புழுதிவாக்கம். இங்கு, பாலாஜி நகர் விரிவு- - 2 பிரதான சாலையில் உள்ள பழைய மழைநீர் வடிகால்வாய், இரண்டு வருடத்திற்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

செங்கழனியம்மன், பஜனை கோவில் தெரு உட்பட, ஒன்பது தெருக்களில் வடிகால்வாய் பணி, 90 சதவீதம் முடிந்துள்ளது. ஆங்காங்கே, சில இணைப்பு சிறு பாலம் மட்டும் விடுபட்டுள்ளது.

மேற்கண்ட தெருக்களில் இருந்து வரும் மழைநீர், பாலாஜி நகர் விரிவு பிரதான சாலையோரம் உள்ள வடிகால்வாயில் சென்று, பாலாஜி நகர் விரிவு -- 2ல், 19, 18வது தெருக்களில் பிரிந்து, வீராங்கால் ஓடையை அடைந்து, வேளச்சேரி-, பள்ளிக்கரணை, ஒக்கியம் மதகுகள் வழியாக, பகிங்ஹாம் கால்வாய் சென்று கடலில் கலக்கிறது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், 250 மீ., நீளம், 5 அடி அகலம், 4 அடி ஆழமுள்ள வடிகால்வாய் அமைக்கப்பட்டது. இது, சேறும் சகதியுமாக துார்வார முடியாமல் பயனற்ற நிலையில் இருந்தது.

இதனால், புதிய வடிகால்வாய் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை.

புதிய கால்வாய் அமைக்கும் முன், இங்கு நல்ல நிலையில் இருந்த தார்ச்சாலையை அகற்றி புதிய சாலை உயரமாக அமைக்கப்பட்டதால், மழைநீர் செல்ல வடிகால்வாயில் வழியின்றி, மழை வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.

இதுபோல், பாலாஜி நகர் விரிவு - -2, 24வது தெருவிலும் பயன்படுத்த இயலாத, துார்ந்து போன வடிகால்வாய் உள்ளது.

இதில், அன்னை தெராசா, வில்லேஜ் சாலை உட்பட ஆறு தெருக்களின் மழைநீர், தனியார் பள்ளியின் அருகில் வீராங்கால் ஓடையில் கலக்கிறது.

அடுத்து, ராமலிங்க நகர் பிரதான சாலையில் வடிகால்வாய் பணி நிறைவடைந்து விட்டது. ஆனால், அதன் இருபுறமுள்ள 40 தெருக்களில் இணைப்பு வடிகால்வாய்கள் அமைக்கப்படவில்லை. ராம் நகரிலும் பல தெருக்களில் வடிகால்வாய் அமைக்கப்படவில்லை.

எங்கெல்லாம் நீர் செல்ல தடை உள்ளதோ, அங்கே சிறு பாலம் அமைத்து, கால்வாய்களை இணைத்தால் மட்டுமே, இறுதியாக செல்ல வேண்டிய வீராங்கால் ஓடை நோக்கி மழை நீர் செல்லும்.

எனவே, பருவ மழை வருவதற்குள், காலம் தாழ்த்தாமல் வடிகால்வாய்களை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ராம்நகர் வடக்கு, தெற்கு விரிவு பகுதிகளில் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளன. பருவ மழைக்குள் விடுபட்ட பகுதிகளில், மீதமுள்ள பணிகள் முடிக்கப்படும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us