/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கொரோனா பாதித்தவர்களிடம் மாநகராட்சி அழுத்தம் வெளியே சொல்லாதீங்க! பதற்றப்படாமல் வீட்டில் ஓய்வெடுத்தாலே போதுமாம் கொரோனா பாதித்தவர்களிடம் மாநகராட்சி அழுத்தம் வெளியே சொல்லாதீங்க! பதற்றப்படாமல் வீட்டில் ஓய்வெடுத்தாலே போதுமாம்
கொரோனா பாதித்தவர்களிடம் மாநகராட்சி அழுத்தம் வெளியே சொல்லாதீங்க! பதற்றப்படாமல் வீட்டில் ஓய்வெடுத்தாலே போதுமாம்
கொரோனா பாதித்தவர்களிடம் மாநகராட்சி அழுத்தம் வெளியே சொல்லாதீங்க! பதற்றப்படாமல் வீட்டில் ஓய்வெடுத்தாலே போதுமாம்
கொரோனா பாதித்தவர்களிடம் மாநகராட்சி அழுத்தம் வெளியே சொல்லாதீங்க! பதற்றப்படாமல் வீட்டில் ஓய்வெடுத்தாலே போதுமாம்
ADDED : மே 23, 2025 11:09 PM

சென்னையில் தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில், 10க்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர்களை சந்திக்கும் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள், 'பதற்றப்படாமல் வீட்டில் ஓய்வெடுத்தாலே போதும்; தொற்று பாதிப்பு குறித்து வெளியில் யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்' என, குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுத்து வருவது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று, 2020ல் கண்டறியப்பட்டது. வெளிநாட்டில் இருந்து வந்த நபர் வாயிலாக, கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் பாதிப்பு தீவிரமானது.
தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் படுக்கை வசதி கூட இல்லாமல், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை வாயில்களிலேயே காத்திருந்து, உயிரிழந்தனர்.
மத்திய, மாநில அரசுகள் எடுத்த தீவிர தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி திட்டம் உள்ளிட்டவற்றால், 2023ம் ஆண்டுக்கு பின், படிப்படியாக கொரோனாவின் தீவிரம் குறைந்தது.
அதேநேரம், அவ்வப்போது கொரோனாவால் ஓரிருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ஹாங்காங், சிங்கப்பூரில் கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால், இந்தியாவிலும் கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கேரளா, தமிழகம், மஹாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்திலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால், 10க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டோர், தங்கள் பாதிப்பு குறித்து மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என, அவர்களது குடும்பத்தினரை சந்தித்து, மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
நோய் தொற்று குறித்து மற்றவர்களுக்கு தெரிவிப்பதால், 'தேவையற்ற பதற்றநிலை ஏற்படும். டாக்டரிடம் ஆலோசனை பெற்று, வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்' என, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
'கொரோனாவின் தீவிரம் குறித்து, அச்சப்பட வேண்டாம்; மக்களிடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம்' என, மத்திய - மாநில அரசுகள் கூறி வருகின்றன.
தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான கொரோனா வைரஸ் தற்போது இல்லை. மாநில அரசின் ஆய்வுப்படி, தமிழகத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு தான் உள்ளது. இவை சாதாரண சளி பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வகை தான். இவற்றால், தீவிர பாதிப்பு இல்லை.
அதனால், ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதை, அருகாமையில் இருப்பவர்களிடம் கூறி, தேவையில்லாத பதற்ற சூழலை உருவாக்க வேண்டாம் என்ற அடிப்படையில், மற்றவர்களிடம் பகிர வேண்டாம் என, அறிவுறுத்துகிறோம்.
அதேநேரம், பாதிக்கப்பட்டோர் டாக்டரிடம் சிகிச்சை பெற்று, வீட்டிலேயே சிகிச்சை பெற்றாலே போதுமானது.
மக்களிடையே சமூக பரவலாக கொரோனா உருவாகும் சூழல், சென்னையில் இல்லை. எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம்; பதற்றமும் அடைய வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொரோனா தொற்று பரவலால், கடந்த காலங்களில் நேர்ந்த உயிரிழப்புகளை கருத்தில்
வைத்து, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். தொற்று
அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு, உரிய பரிசோதனைகளை செய்ய
வேண்டும். தொற்று உறுதியானவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்க அனைத்து
மருத்துவமனைகளிலும் தனி வார்டுகளை ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில்
காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
- தினகரன் பொதுச்செயலர், அ.ம.மு.க.,
- நமது நிருபர் -