Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மழைநீர் கால்வாயை துார்வாரியும் பலனில்லை மர்ம காய்ச்சல், கொசு தொல்லையும் அதிகரிப்பு மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

மழைநீர் கால்வாயை துார்வாரியும் பலனில்லை மர்ம காய்ச்சல், கொசு தொல்லையும் அதிகரிப்பு மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

மழைநீர் கால்வாயை துார்வாரியும் பலனில்லை மர்ம காய்ச்சல், கொசு தொல்லையும் அதிகரிப்பு மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

மழைநீர் கால்வாயை துார்வாரியும் பலனில்லை மர்ம காய்ச்சல், கொசு தொல்லையும் அதிகரிப்பு மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

ADDED : செப் 22, 2025 03:23 AM


Google News
வளசரவாக்கம்: வளசரவாக்கம் மண்டலத்தில் மர்ம காய்ச்சல் மற்றும் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. துார்வாரிய கழிவு, மழைநீர் கால்வாயை ஒட்டி, சாலையோரம் வைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் ெபய்த மழையில் கரைந்து, மீண்டும் கால்வாயில் விழுந்துள்ளதாக, வளசரவாக்கம் மண்டல குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

வளசரவாக்கம் மண்டலக்குழு கூட்டம், அதன் தலைவர் ராஜன் தலைமையில், மண்டல அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

ஸ்டாலின், தி.மு.க., - 144வது வார்டு: மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவில் குடிநீர் வழங்க குழாய் அமைக்கப்படாமல் உள்ளது. அப்பகுதியில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்தசாமி நகர், கன்னியப்ப முதலியார் தெரு, வக்கீல் தோட்டம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் அடிப்படை தேவையான குடிநீர் வசதி கூட ஏற்படுத்தப்படவில்லை.

சத்யநாதன், அ.தி.மு.க., 145வது வார்டு: மழைநீர் வடிகால்வாயில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால், பகுதி மக்கள் காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். நெற்குன்றத்தில், மூன்று சாலைகள், மில்லிங் செய்து பல நாட்கள் கடந்தும் இன்னும் தார் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. அதேபோல், பல்வேறு சாலைகளில் குடிநீர் கசிந்து வீணாகி வருகிறது. அதை விரைவாக சீரமைக்க வேண்டும்.

ரமணி, தி.மு.க., 147வது வார்டு: ஆலப்பாக்கம் பிரதான சாலையில் மழைநீர் வடிகால்வாய் அடைப்பு காரணமாக மழைநீர் தேங்குகிறது. அவற்றை சுத்தம் செய்ய வேண்டும். கொசு தொல்லை அதிகரித்துள்ளது. அதை கட்டுப்படுத்த வேண்டும்.

கிரிதரன், அ.ம.மு.க., 148வது வார்டு: விருகம்பாக்கம் கால்வாயை துார்வாரி சீரமைக்க 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கால்வாயின் துவக்க பகுதியான நெற்குன்றத்தில் துார்வாரி, கரை அமைக்கும் பணியை முதலில் துவங்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் முடிந்தும், 50 சதவீதம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கவில்லை.

தினமும் 3,000க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகின்றனர்; டைபாய்டு காய்ச்சலும் அதிகரித்துள்ளது. வார்வடில் உள்ள 80க்கும் மேற்பட்ட கால்வாய்கள் திறந்த நிலையில் உள்ளன. அதில், எலி மற்றும் கரப்பான் பூச்சி அதிகரித்துள்ளது.

செல்வி, தி.மு.க., 149வது வார்டு: குடிநீர் வாரியம் மற்றும் மின் வாரிய பணியால், பல சாலைகள் சேதமடைந்துள்ளன. ஸ்ரீதேவிகுப்பம் பிரதான சாலையில் அன்பு நகர் வரை மழைநீர் வடிகால்வாயில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், மழை பெய்தால், வடிகால்வாயில் வடியாமல் சாலையில் மழைநீர் தேங்கி விடுகிறது.

ஹேமலதா, தி.மு.க., 150வது வார்டு: கடந்த சில நாட்களாக பெய்த மழையில், காரம்பாக்கம் மோத்தி நகரில் இரண்டு வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதற்கு மழைநீர் வடிகால்வாயில் இருந்த மின் கம்பங்கள் அகற்றப்படாததே காரணம். இது குறித்து, மின் வாரியம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. பல மின் கம்பங்கள் உடைந்து விழும் நிலையில் உள்ளன.

பிரசாந்த் நகரில் ஒரு வீட்டில் 15 நாய்கள் வளர்க்கப்படுகிறது. அதே சாலையில், 25 தெரு நாய்களுக்கு சாப்பாடு வைக்கின்றனர். சுகாதார துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாரதி, தி.மு.க., 152வது வார்டு: என் வார்டில் கவுன்சிலர் அலுவலகம் இல்லை. சவுத்ரி நகரில் உள்ள பூங்காவில் உள்ள கட்டடத்தை அலுவலகமாக பயன்படுத்தி வருகிறேன். அங்கு தண்ணீர் வசதியில்லாததால், கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பெண் கவுன்சிலரான நான் எங்கு செல்வது?

'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், பணி செய்த ஊழியர்கள், அரசு அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட உணவு மோசமாக இருந்தது.

அதனால் என் சொந்த செலவில் உணவு வாங்கி கொடுத்தேன். எனவே, தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வகுமார், தி.மு.க., 154வது வார்டு: ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடக்கிறது. ஆனால், பேசும் விஷயங்களுக்கு தீர்வு கிடைப்பதில்லை. அதிகாரிகள் சரியாக பணி செய்தால், தான், நாங்கள் மீண்டும் இங்கு வந்து அமர முடியும்.

சாலை வெட்டிற்கு மீட்டருக்கு 6,000 ரூபாய் வாங்கும் குடிநீர் வாரியம், சாலை வெட்டை முறையாக சீர் செய்வதில்லை. அந்த தொகையை குடியிருப்பு மக்களிடம் கொடுத்தால் அவர்களே தரமாக சீரமைத்துவிடுவர்.

மழைநீர் வடிகால்வாயில் துார்வாரிய கழிவுகள், வடிகால்வாய் அருகே வைக்கப்பட்டிருந்தன. கடந்த நாட்களில் பெய்த மழையில் அவை அனைத்தும் கரைந்து மீண்டும் வடிகால்வாயில் விழுந்துவிட்டன.

வார்டு வரன்முறை செய்த பல தெருக்களில் உள்ள வாக்காளர்கள் இன்னும், மாற்றப்பட்ட வார்டுகளில் சேர்க்கப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us