Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 10 ஆண்டு கடந்த தெருவிளக்கு கம்பங்கள் மறைக்க 'மேக் அப்' செய்யும் மாநகராட்சி

10 ஆண்டு கடந்த தெருவிளக்கு கம்பங்கள் மறைக்க 'மேக் அப்' செய்யும் மாநகராட்சி

10 ஆண்டு கடந்த தெருவிளக்கு கம்பங்கள் மறைக்க 'மேக் அப்' செய்யும் மாநகராட்சி

10 ஆண்டு கடந்த தெருவிளக்கு கம்பங்கள் மறைக்க 'மேக் அப்' செய்யும் மாநகராட்சி

ADDED : ஜூன் 24, 2025 12:26 AM


Google News
Latest Tamil News
மணலி, அடிபாகம் துருப்பிடித்து, மண்ணை கவ்வும் நிலையில் உள்ள, 10 ஆண்டுகள் கடந்த தெருவிளக்கு கம்பங்களின் சிமென்ட் திட்டு அமைத்து, 'மேக் அப்' செய்யும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில், 15 மண்டலங்கள், 200 வார்டுகளில், 3,01,234 தெருவிளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தெருக்களில் பொருத்தும் தெருவிளக்கு கம்பம், 13,000 ரூபாயும், நெடுஞ்சாலை விரைவு சாலைகளில் பொருத்தப்படும் தெருவிளக்குகள், 20,000 ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.

குறிப்பாக, மணலி மண்டலத்தில் பராமரிக்கப்பட்டு வரும், 12,000க்கும் மேற்பட்ட தெருவிளக்குகளில், 60 சதவீதத்திற்கும் மேல், 2011 - 2016ல் அமைக்கப்பட்ட தெருவிளக்குகள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பத்தாண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், அந்த தெருவிளக்குகள் துருப்பிடித்து, அலங்கோலமாகவும், பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையிலும் உள்ளன.

இதில், வார்டு 17ல், தீயம்பாக்கம், பெரியார் நகர், அரியலுார், கொசப்பூர், வடபெரும்பாக்கம், தியாகி விஸ்வநாத தாஸ் நகர் போன்ற பகுதிகளில், பெரும்பாலான தெருவிளக்குகள் ஒளிர்வதில்லை.

மேலும், சில தெருவிளக்குகளை செடி கொடிகள் மூடி, புதர் மண்டியுள்ளது. அங்கு, தெருவிளக்குகள் இருக்கும் தடமே தெரியவில்லை. சாலையை பார்த்தபடி இருக்க வேண்டிய தெருவிளக்குகள், எதிர்திசையில் திரும்பியுள்ளன.

தவிர, அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையில், தெருவிளக்குகளின் அடிபாகம் பெயர்ந்து ஓட்டையாக காட்சியளிக்கிறது. இதை மூடி மறைப்பதற்கு, மாநகராட்சி, சிமென்ட் திட்டுகள் அமைத்து, பழுதான மின் கம்பங்களை அகற்றாமலே, கணக்கு காட்டி வருகின்றனர்.

இது குறித்து, 17வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ஜெய்சங்கர் கூறியதாவது:

மண்டலம் முழுதும் இப்பிரச்னை உள்ளது. என் வார்டில், தீயம்பாக்கம், கொசப்பூர், பெரியார் நகரில் பல தெருவிளக்குகள் ஒளிர்வதில்லை. துருப்பிடித்து எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் சூழலில் அபாயகரமாக உள்ளது.

இது குறித்து, மண்டல குழு கூட்டத்திலும் தகவல் தெரிவித்துள்ளேன். பெரும்பாலான தெருவிளக்குகள் அமைத்து, 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. உடனடியாக, இந்த தெருவிளக்கு கம்பங்களை கணக்கெடுத்து, சீரமைத்து கொடுக்க வேண்டும்.

முடிந்தவரை, புதிய கம்பங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும். இல்லாவிடில், அடிபாகம் சேதமான தெருவிளக்கு கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும், பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us