3 நாட்களாக இரவு நேர தொடர் மின் தடை
3 நாட்களாக இரவு நேர தொடர் மின் தடை
3 நாட்களாக இரவு நேர தொடர் மின் தடை
ADDED : மே 29, 2025 12:30 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர் மேற்கில் கலைஞர் நகர், பொன்னியம்மன் நகர், ராஜா சண்முகம் நகர், சரஸ்வதி நகர், அம்பேத்கர் நகர் உட்பட 30க்கும் மேற்பட்ட நகர்களில், 50,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக திருவொற்றியூர் மேற்கில் பெரும்பாலான பகுதிகளில், மின் தடை ஏற்பட்டு வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில், மின் தடை ஏற்படுவதால், புழுக்கம் தாளாமல் துாக்கமின்றி மக்கள் தவிக்கின்றனர்.
இது தொடர்பாக, ஜோதி நகர் மின் வாரியத்தை தொடர்பு கொள்ள முயற்சிக்கும்போது, பொறுப்பு உதவி பொறியாளர் என்பதால், பணியில் அலட்சியம் காட்டுகின்றனர்.
தவிர, இரு களப்பணியாளர்கள் மட்டுமே பணியில் இருப்பதால், எந்த பழுது பார்ப்பு பணிகளும் மேற்கொள்ள முடியவில்லை என தெரிகிறது. அவசர அழைப்பு எண், அதிகாரி எண், உதவி பொறியாளர் அலுவலக எண் உட்பட, எந்த போனிலும் மக்கள் தொடர்பு கொள்ள முடியாத அவல நிலை உள்ளது.
ஏற்கனவே, மாணிக்கம் நகர் - அம்பேத்கர் நகர் சுரங்கப்பாதை மூடலால், போக்குவரத்து முடக்கம்; குடிநீர் பற்றாக்குறையால் வீதியில் குடங்களுடன் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வரிசையில், மின் பிரச்னையும் சேர்ந்து கொண்டதால், மேற்கு பகுதி மக்கள் அடிப்படை வசதிகளின்றி, தவியாய் தவிக்கும் நிலைமை உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, தொடரும் மின் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது. இல்லாவிடில், வீதியில் இறங்கி போராடும் சூழல் ஏற்படும் என, அவர்கள் தெரிவித்தனர்.