/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னைக்குள் பயணியரை ஏற்ற... நிபந்தனை! ஆம்னி பஸ்களுக்கு தற்காலிக அனுமதிசென்னைக்குள் பயணியரை ஏற்ற... நிபந்தனை! ஆம்னி பஸ்களுக்கு தற்காலிக அனுமதி
சென்னைக்குள் பயணியரை ஏற்ற... நிபந்தனை! ஆம்னி பஸ்களுக்கு தற்காலிக அனுமதி
சென்னைக்குள் பயணியரை ஏற்ற... நிபந்தனை! ஆம்னி பஸ்களுக்கு தற்காலிக அனுமதி
சென்னைக்குள் பயணியரை ஏற்ற... நிபந்தனை! ஆம்னி பஸ்களுக்கு தற்காலிக அனுமதி
ADDED : பிப் 10, 2024 12:02 AM

சென்னை :கோயம்பேடில் பணிமனைகள் வைத்துள்ள ஆம்னி பேருந்துகள், சென்னை நகருக்குள் பயணியரை ஏற்றிச் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான முழுமையான வசதி செய்து தரப்படும் வரை மட்டுமே தற்காலிகமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது.
'தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும், இனி கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்றும், கோயம்பேடு மற்றும் சென்னைக்குள் பயணியரை ஏற்றி, இறக்க தடை விதித்தும்' கடந்த மாதம் போக்குவரத்து துறை கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார்.
இதன் படி, கடந்த 30ம் தேதி முதல் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்துக்குள் ஆம்னி பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். சென்னையில், குறிப்பிட்ட இடங்களில் பயணியரை ஏற்றி, இறக்க அனுமதிக்கும்படி கோரினர்.
இவ்வழக்கு, நீதிபதி மஞ்சுளா முன், விசாரணைக்கு வந்தது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து, அரசுடன் பேசி தீர்வு காணும்படி நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.
தொடர்ந்து, கடந்த 3ம் தேதி, அதிகாரிகள் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இடையே பேச்சு நடந்தது.
அதில், 'கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான பணிமனை, அலுவலகம் உள்ளிட்ட முழுமையான வசதிகள் இல்லை. தற்போது நகரின் பல்வேறு பகுதிகளில் ஆம்னி பேருந்துகளின் பணிமனைகள் உள்ளன.
'தினமும் அங்கு வழக்கமான பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. கிளாம்பாக்கம் வரும் வழியில், சென்னை நகருக்குள் பயணியரை ஏற்றி, இறக்க அனுமதி வேண்டும் ' உள்ளிட்ட கோரிக்கைகளை, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முன்வைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு நேற்று, நீதிபதி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவின்படி, சென்னையில் ஆம்னி பேருந்துகள் செல்லும் வழித்தடங்களின் வரைபடங்கள், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ''கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்தும், அவற்றின் பணிமனை மற்றும் அலுவலகத்தில் இருந்தும் செல்லும் வழியில் பயணியரை ஏற்றி, இறக்க அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''கோயம்பேடில் இருந்து பேருந்துகளை இயக்க அனுமதித்தால், கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் எதற்கு கட்டப்பட்டது என்ற கேள்வி வரும்.
''முடிச்சூரில், 5 ஏக்கரில் ஆம்னி பேருந்துகளுக்கு அனைத்து வசதிகளுடன் பராமரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டு, மே இறுதிக்குள் ஒப்படைக்கப்படும். போரூர், சூரப்பட்டில் பயணியரை ஏற்றி, இறக்கலாம்,'' என்றார்.
இதையடுத்து, ஆம்னி பேருந்து நிலையங்களில் இருந்து, பயணியரை ஏற்றி, இறக்குவது குறித்து, நீதிபதி மஞ்சுளா பிறப்பித்த இடைக்கால உத்தரவு:
முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் பணிமனைக்கு, ஆம்னி பேருந்துகள் மாற்றப்பட்டு விட்டால், கோயம்பேடில் இருந்துதான் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முடிவுக்கு வந்துவிடும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பணிமனைகள், பொதுமக்களின் வசதிக்காக பயன்படுத்தப்பட்டு வந்ததால், இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வரை, அதை தொடர்ந்து அனுமதிக்கலாம்.
அதேபோல, போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் பயணியரை ஏற்றிக் கொள்ளலாம். தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தினுள் சென்று, பயணியரை ஏற்றி, இறக்காமல் இயக்கக்கூடாது.
போரூர், சூரப்பட்டு தவிர பயணியரை, வேறு இடங்களில் ஏற்றி, இறக்குவதாக, ஆன்லைன், மொபைல் செயலிகளில் குறிப்பிடக் கூடாது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, இந்த இடைக்கால ஏற்பாடுகளை தொடரலாம். வழக்கின் இறுதி விசாரணை, ஏப்., 15க்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.