/உள்ளூர் செய்திகள்/சென்னை/சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்க திட்டம்... முடக்கம் அதிகாரப்பகிர்வில் தொடருது குழப்பம்சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்க திட்டம்... முடக்கம் அதிகாரப்பகிர்வில் தொடருது குழப்பம்
சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்க திட்டம்... முடக்கம் அதிகாரப்பகிர்வில் தொடருது குழப்பம்
சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்க திட்டம்... முடக்கம் அதிகாரப்பகிர்வில் தொடருது குழப்பம்
சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்க திட்டம்... முடக்கம் அதிகாரப்பகிர்வில் தொடருது குழப்பம்
ADDED : ஜூன் 03, 2025 12:15 AM

சென்னை கட்டுமான திட்ட அனுமதிக்கான அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில் தொடரும் குழப்பம் காரணமாக, சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்கப் பணிகள், பல ஆண்டுகளாக முடங்கியுள்ளன.
சென்னை மாநகராட்சியை சுற்றியுள்ள உள்ளாட்சிகள் மட்டும், சென்னை பெருநகர் பகுதியாக இருந்தன. இதில், ஊரக உள்ளாட்சியாக இருந்த பெரும்பாலான பகுதிகள், தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளாக தரம் உயர்ந்துள்ளன.
அதிலும், பேரூராட்சி, நகராட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, தாம்பரம், ஆவடி போன்ற புதிய மாநகராட்சிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சி.எம்.டி.ஏ., நிர்வாகக் கட்டுப்பாட்டில் வரும் எல்லை பரப்பை விரிவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இதன்படி, 2018ல் சென்னை பெருநகர் பகுதியை விரிவாக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதில், தற்போது, 1,179 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ள சென்னை பெருநகரை, 5,904 சதுர கி.மீ., பரப்பளவில் விரிவாக்க முடிவானது.
இந்த எல்லைக்குள் வரும் உள்ளாட்சி அமைப்புகள் பட்டியல் சரிபார்க்கப்பட்டு, நிர்வாக ரீதியாக ஒப்புதலும் பெறப்பட்டது.
இதில், உள்ளாட்சி பகுதிகள் சேர்ப்பது, எல்லை ஆகிய விஷயங்கள் தொடர்பான நிர்வாக நடவடிக்கைகள், 2022ல் முடிக்கப்பட்டன.
இருப்பினும், தற்போது வரை, சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்கம் அமலுக்கு வராமல் ஏட்டளவிலேயே உள்ளது.
இதனால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், அரக்கோணம் பகுதிகளுக்கு, சி.எம்.டி.ஏ., வாயிலாக கட்டுமான திட்ட அனுமதி வழங்கல், முழுமை திட்டம் தயாரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, நகரமைப்பு வல்லுநர்கள் கூறியதாவது:
தற்போது, 1,179 சதுர கி.மீ., பரப்பளவில் கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் சி.எம்.டி.ஏ.,விடம், 5,904 சதுர கி.மீ., பரப்பளவுக்கு கட்டுமான திட்ட அனுமதி அதிகாரத்தை வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
கட்டுமான திட்ட அனுமதி, நில வகைப்பாடு மாற்றம், முழுமை திட்டம் தயாரிப்பு, விரிவான வளர்ச்சி திட்ட தயாரிப்பு பொறுப்புகளை ஏற்கும் அளவுக்கு சி.எம்.டி.ஏ.,வில் கட்டமைப்பு இல்லை.
ஒட்டுமொத்தமாக அனைத்து பொறுப்பையும், அதிகாரத்தையும் சி.எம்.டி.ஏ.,விடம் குவிக்காமல், தனித்தனி குழுமங்களை ஏற்படுத்துவது நல்ல தீர்வாக இருக்கும் என, அரசுக்கு குறிப்பிட்ட சில அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
இந்த பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. இதில், அரசு முடிவு எடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், சி.எம்.டி.ஏ., விரிவாக்க திட்டம் முடங்கியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இணையும் உள்ளாட்சிகள்
எல்லை விரிவாக்கம் காரணமாக சி.எம்.டி.ஏ.,வில் இணையும் உள்ளாட்சிகள் விபரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி அரக்கோணம், செங்கல்பட்டு, மறைமலை நகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர் நகராட்சிகள்
ஆரணி, கும்மிடிப்பூண்டி, மாமல்லபுரம், மறைமலை நகர், பொன்னேரி, ஸ்ரீபெரும்புதுார், தக்கோலம், திருக்கழுக்குன்றம், ஊத்துக்கோட்டை, வாலாஜாபாத், திருப்போரூர் பேரூராட்சிகள்
அரக்கோணம், எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, கடம்பத்துார், காஞ்சிபுரம், நெமிலி, பூண்டி, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், திருவாலங்காடு, திருத்தணி, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியங்கள்.