/உள்ளூர் செய்திகள்/சென்னை/வில்லிவாக்கம் பொழுதுபோக்கு பூங்கா பணி ஏழாண்டாக... இழுத்தடிப்பு ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறல்வில்லிவாக்கம் பொழுதுபோக்கு பூங்கா பணி ஏழாண்டாக... இழுத்தடிப்பு ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறல்
வில்லிவாக்கம் பொழுதுபோக்கு பூங்கா பணி ஏழாண்டாக... இழுத்தடிப்பு ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறல்
வில்லிவாக்கம் பொழுதுபோக்கு பூங்கா பணி ஏழாண்டாக... இழுத்தடிப்பு ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறல்
வில்லிவாக்கம் பொழுதுபோக்கு பூங்கா பணி ஏழாண்டாக... இழுத்தடிப்பு ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறல்
ADDED : ஜூன் 01, 2025 12:43 AM

வில்லிவாக்கத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், 16 கோடி ரூபாயில் ஏழு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட பொதுழு போக்கு பூங்கா பணிகள் இன்னும் முடியாமல் இழுபறியாக உள்ளது. திட்ட மதிப்பு 45 கோடியாக உயர்ந்தாலும், ஆக்கிரமிப்பில் உள்ள 40 வீடுகளை அகற்ற முடியாமல், மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
வில்லிவாக்கம் ஏரி, 39 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரி, சிட்கோ நகர் அருகே, வில்லிவாக்கத்தின் தென்பகுதியில் இருப்பதுடன், ஓட்டேரி நீரோடையுடன் இணைந்துள்ளது.
சென்னை குடிநீர் வாரியத்திடம் இருந்த இந்த ஏரி மாசுபட்டு கிடந்ததால், சீரமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
அதன்பின், சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 16 கோடி ரூபாயில், மறுசீரமைப்பு பணி, 2018ல் துவங்கியது.
சீரமைப்பு பணிக்காக, சென்னை குடிநீர் வாரியம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தன்வசம், 11.50 ஏக்கர் பரப்பை மட்டும் வைத்துகொண்டு, 27.50 ஏக்கர் பரப்பை மாநகராட்சியிடம் ஒப்படைத்தது.
பின், 1 மீட்டராக இருந்த ஏரியின் ஆழம், 5 மீட்டர் வரை துார்வாரப்பட்டது. நீர் கொள்திறன் அளவும், 70,000 கனமீட்டர் அளவுக்கு உயர்த்தப்பட்டது.
மேலும், நடைபாதை, சுற்றுச்சுவர், படகு சவாரி, வாகன நிறுத்தம், உணவகம், ஆவின் பாலகம், இசை நீரூற்று, '12டி' திரையரங்கம், தொங்கும் பாலம், சிறுவர் விளையாட்டு பூங்கா, ஸ்னோ வோர்ல்டு உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைக்கும் பணி துவங்கப்பட்டது.
இதில், 250 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலத்தில், 8 கோடி ரூபாய் மதிப்பில் கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
இதற்கிடையே, பசுமை தீர்ப்பாய உத்தரவுபடி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 3 ஏக்கர் மட்டும் வைத்துக்கொண்டு, 8 ஏக்கர் பரப்பளவு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு மற்றொரு ஏரி, பூங்கா, வாகன நிறுத்தும் இடம், மீன் பிடிக்கும் இடம் ஆகியவை, 7.50 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 40 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்களை ஏரி கரையோரத்தில் இருந்து அகற்றக்கூடாது என, உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றுள்ளனர். இந்த தடை ஆணையை எதிர்த்து மாநகராட்சி சார்பிலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இன்னும் தீர்வு காண முடியாமலும், ஆக்கிரிப்பு அகற்ற முடியாமலும், அதிகாரிகள் திணறி வருகின்றனர். திட்டமதிப்பு, 16 கோடியில் இருந்து, 45 கோடி ரூபாயாக உயர்ந்ததுதான் மிச்சம். இன்னும் பணிகள் முடியவில்லை.
இதுகுறித்து, மாநகராட்சி உயர் அதிகாரிகள் கூறியதாவது:
வில்லிவாக்கம் ஏரியில் இருந்த, 160 குடியிருப்புகள் அகற்றப்பட்டு விட்டது. தற்போது, 40 குடியிருப்புகள், நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றுள்ளதால், அகற்ற முடியவில்லை.
நீதிமன்ற விடுமுறை முடிந்தப்பின், ஜூன் மாதத்தில் இதற்கான வழக்கில், தடை ஆணையை வாபஸ் பெற்று, ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றப்படும்.
பின், வில்லிவாக்கம் பொழுதுப்போக்கு பூங்காவிற்கான பணிகள் வேகப்படுத்தப்பட்டு, ஜூலை மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதில், எவ்வித மாற்றமும் இருக்காது; நம்புங்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -