Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை திட்டம் ரயில்வேயிடம் கூடுதல் நிலம் பெறுவதில் இழுபறி

குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை திட்டம் ரயில்வேயிடம் கூடுதல் நிலம் பெறுவதில் இழுபறி

குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை திட்டம் ரயில்வேயிடம் கூடுதல் நிலம் பெறுவதில் இழுபறி

குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை திட்டம் ரயில்வேயிடம் கூடுதல் நிலம் பெறுவதில் இழுபறி

ADDED : ஜூன் 16, 2025 02:54 AM


Google News
Latest Tamil News
குரோம்பேட்டை:குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை பணியை முடிக்க, ரயில்வே நிர்வாகத்திடம் கூடுதல் நிலம் பெறுவதில் இழுபறி நிலவுகிறது. இதனால், இச்சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.

குரோம்பேட்டை, ராதா நகர் ரயில்வே கேட்டை, தினமும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். அந்த கேட் மூடப்படும்போது, ஜி.எஸ்.டி., சாலை, ராதா நகர் சாலையில், வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இதனால், இலகுரக வாகனங்கள் சென்று வர வசதியாக, அப்பகுதியில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணி, 2007ல் துவங்கின.

ரயில்வே பகுதியில் பணிகள் முடிந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ளன.

கடந்த 2019 ஜூனில் சுரங்கப்பாதை திட்டத்திற்கான பணிகளை துவக்க வசதியாக, 46 கட்டடங்கள் இடிக்கப்பட்டன. தொடர்ந்து, 15.47 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு, நெடுஞ்சாலைத் துறை பணிகள் துவங்கின. கடந்த, 2024 மே மாதம் இச்சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சுரங்கப்பாதை இருவழிப்பாதையான இந்த சுரங்கப்பாதையின் அகலத்தை பார்த்தால், அதற்கு சாத்தியமில்லை. அப்படியே பயன்படுத்தினாலும், ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உள்ளது.

இதனால், அகலத்தை அதிகரித்தால் மட்டுமே, இருவழிப்பாதைக்கு சாத்தியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் வைத்து, ரயில்வே இடத்தில் 100 அடி நீளத்திற்கு, 10 அடி அகலம் நிலத்தை ஒதுக்க வேண்டும் என, இந்தாண்டு ஜனவரியில், தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம், நெடுஞ்சாலைத்துறையினர் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

ஆனால், ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து நிலம் பெறுவது இழுபறியாகவே உள்ளது.

இத்திட்டம் தொடர்பாக, குரோம்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்தானம் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு, நெடுஞ்சாலை சார்பில் வந்த பதிலில் 'நிலம் வழங்குவது தொடர்பாக, ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து எழுத்துப்பூர்வமாக எந்த பதிலும் வரவில்லை. அதேநேரம், ஜூலை 31ம் தேதிக்குள் சுரங்கப்பாதை பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது' என, குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:

தாங்கள் கொடுக்கும் இடத்திற்கு பதிலாக மாற்று இடம் வழங்க வேண்டும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்கிறது.

ரயில்வே நிர்வாகம் கொடுக்கும் நிலத்திற்கு, மாற்று நிலம் கேட்கிறது. குரோம்பேட்டை ரயில் நிலையத்தை ஒட்டி, பட்டா நிலங்களே உள்ளன. இதனால், ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் வாயிலாக மாற்று நிலத்தை கையப்படுத்தி, நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

இது, தற்போதைக்கு சாத்தியமில்லை. இதனால், ராதாநகர் சுரங்கப்பாதையை பயன்பாட்டிற்கு திறப்பதில், இன்னும் காலதாமதம் ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறுகையில், 'குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை திட்டத்தின் முக்கியத்துவத்தை உயர் அதிகாரிகள் கருத்தில் வைத்து, தேவையான நிலத்தை பெற்று பணிகளை முடித்து, குறித்த காலத்திற்குள் சுரங்கப்பாதையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us