/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஐந்து பஸ் நிலையங்கள் மேம்பாடு பணி துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் ஐந்து பஸ் நிலையங்கள் மேம்பாடு பணி துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
ஐந்து பஸ் நிலையங்கள் மேம்பாடு பணி துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
ஐந்து பஸ் நிலையங்கள் மேம்பாடு பணி துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
ஐந்து பஸ் நிலையங்கள் மேம்பாடு பணி துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : மே 21, 2025 12:54 AM
சென்னை :அய்யப்பன்தாங்கல், திருவான்மியூர் உள்ளிட்ட ஐந்து பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணிகளை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
* சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வாயிலாக, சென்னை வெளிவட்ட சாலையில் உள்ள மீஞ்சூர், வெள்ளனுார், வரதராஜபுரம், திருநாகேஸ்வரம் ஆகிய நான்கு இடங்களில், 11.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன உடற்பயிற்சி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தி.நகர் சோமசுந்தரம் விளையாட்டு மைதானத்தில் 3.20 கோடி ரூபாய் செலவில் கிரிக்கெட், கூடைப்பந்து, கைப்பந்து, பூப்பந்து, மேஜை பந்து விளையாட்டு ஆடுகள வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு, 14.6 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்ட திட்ட பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
* அய்யப்பன்தாங்கல் மாநகர பேருந்து நிலையம் 18.90 கோடி ரூபாய், திருவான்மியூர் மாநகர பேருந்து நிலையம் 28.20 கோடி ரூபாய், ஆவடி பேருந்து நிலையம் 36.60 கோடி ரூபாய், பாடியநல்லுார் பேருந்து நிலையம் 10.90 கோடி ரூபாய், வள்ளலார் நகர் பேருந்து நிலையம் 9.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ளன.
* அண்ணாநகரில் உள்ள நுாலகம் 15.50 கோடி ரூபாய், காந்தி நகரில் உள்ள நுாலகம் 24.60 கோடி ரூபாய் அசோக்நகரில், 12.70 கோடி ரூபாய், மகாகவி பாரதி நகரில் 7.18 கோடி ரூபாய், இந்திரா நகரில் 4.26 கோடி ரூபாய், ராஜா அண்ணாமலைபுரத்தில் 3.49 கோடி ரூபாய், ஆழ்வார்பேட்டை பாரதிதாசன் சாலையில் 12.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ளன.
* எழும்பூர் ஹாரிங்டன் சாலையில் 13.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய கூடம், மயிலாப்பூர் லஸ் நிழற்சாலையில் 8.25 கோடி ரூபாய், ஆதம்பாக்கத்தில் 9.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. சேத்துப்பட்டு பசுமை பூங்கா 20.10 கோடி ரூபாய், சித்தாலப்பாக்கம் நீருறிஞ்சி பூங்கா 3.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட உள்ளது.
* கோவூரில் உள்ள கோவில் குளம் 4.98 கோடி ரூபாய், நெமிலிச்சேரி புத்தேரி ஏரி 6.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ளன. கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் 3.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளிர்சாதன கிடங்கு அமைக்கப்படவுள்ளது.
இவ்வாறு 225 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 20 புதிய திட்ட பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த இந்நிகழ்ச்சியில், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச்செயலர் முருகானந்தம், வீட்டுவசதி துறை செயலர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ., செயல் அலுவலர் சிவஞானம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.