
புத்தக கண்காட்சியின் நுழைவுவாயில் அருகே, சிலைகளால் நிரம்பி வழியும் அரங்கு, பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது. கண்காட்சியாகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ள சிலைகள், 250 ரூபாயிலிருந்து, 2.50 லட்சம் ரூபாய் வரையிலும் விற்பனைக்கு உள்ளன.
அரங்கில் வைக்கப்பட்டுள்ள ஆளுயர திருவள்ளுவர் சிலையின் முன் நின்று, பலரும் 'செல்பி' எடுத்துக் கொள்கின்றனர்.
இதுகுறித்து, அரங்கு நிர்வாகி சவுமியா, 36, என்பவர் கூறியதாவது:
இல்லந்தோறும் வள்ளுவம் எனும் திட்டத்தை உருவாக்கி, அதன் வாயிலாக, வள்ளுவர் சிலையை அளவுக்கேற்ப, மானிய விலையில் தருகிறோம்.
அதன்படி, இதுவரை 15,000 வள்ளுவர் சிலைகளை கடந்த ஆண்டு விற்பனை செய்துள்ளோம்.
இங்குள்ள சிலைகள் அனைத்தும் கல்லால் உருவாக்கப்பட்டு, அதன் மீது, 'மெட்டல் பவுடர்' முலாம் பூசப்பட்டுள்ளது. ஒருவர் அவரது புகைப்படத்தைக் கொடுத்தால், அந்த புகைப்படம் போன்ற சிலைகளை உருவாக்கித் தருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.