Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/வீடுகளில் துாசி படர்ந்து பாதிப்பு கலவை தயாரிப்பு நிறுவனம் முற்றுகை

வீடுகளில் துாசி படர்ந்து பாதிப்பு கலவை தயாரிப்பு நிறுவனம் முற்றுகை

வீடுகளில் துாசி படர்ந்து பாதிப்பு கலவை தயாரிப்பு நிறுவனம் முற்றுகை

வீடுகளில் துாசி படர்ந்து பாதிப்பு கலவை தயாரிப்பு நிறுவனம் முற்றுகை

ADDED : ஜன 31, 2024 12:16 AM


Google News
வானகரம்,மெட்ரோ ரயில் பணிக்காக சிமென்ட் கலவை தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து துாசி வெளியேறி, குடியிருப்பு பகுதியில் புகுந்ததால், அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு, பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, மதுரவாயல் அடுத்த வானகரம் முதல் நிலை ஊராட்சிக்கு உட்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில், மெட்ரோ ரயில் கட்டுமானத்திற்கு சிமென்ட் கலவை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கிருந்து, மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் இடங்களுக்கு இரவு பகலாக, 200க்கும் மேற்பட்ட லாரிகளில் சிமென்ட் கலவை அனுப்பப்படுகிறது.

இதனால், இந்த பகுதியைச் சுற்றியுள்ள 5,000த்திற்கும் மேற்பட்ட வீடுகளில் சிமென்ட் துாசி படர்ந்துள்ளது.

இதனால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணியர் சுவாச கோளாறு, அலர்ஜி போன்றவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், இதன் அருகே அரசு பள்ளி செயல்படுகிறது. அங்கு படிக்கும் 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு சுவாச பிரச்னை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிறுவனத்தை அகற்ற கோரி, அமைச்சர் சேகர்பாபு உட்பட பலரிடம் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து, அந்த சிமென்ட் தயாரிக்கும் நிறுவனத்தில் இரும்புக் கதவை உள்பக்கமாக பூட்டு போட்டு பூட்டி, நிர்வாகிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

சிமென்ட் தயாரிக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், மேலும் இனி இந்த கம்பெனி இங்கே இருக்கக் கூடாது என்றும் கூறி, முற்றுகையில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார், இதுகுறித்து எம்.எல்.ஏ., மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேசி, நடவடிக்கை எடுப்பதாக, அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

மேலும், அந்த நிறுவனத்திற்கு கனரக வாகனங்கள் வந்து செல்ல முடியாதபடி, அந்நிறுவனம் அமைந்துள்ள சாலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில்,'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக பெரிய கற்களால் தடுப்புகள் அமைத்தனர்.

இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us