நாயகனின் வரவுக்காக தவித்த அர்ச்சனா
நாயகனின் வரவுக்காக தவித்த அர்ச்சனா
நாயகனின் வரவுக்காக தவித்த அர்ச்சனா
ADDED : ஜன 04, 2024 12:18 AM

இசை வாத்தியங்கள் முழங்க, நடராஜ பெருமான் பல்லக்கில் எழுந்தருளி ஆடி வருவதுபோல் அமைந்தது, அர்ச்சனா நாராயணமூர்த்தி நாட்டிய நிகழ்ச்சியின் முதல் உருப்படி.
இது, புதுவிதமாக சாஹித்யத்தை கொண்டு, பஞ்சராகத்தில் சங்கீர்ண ஜாதி அடதாளத்தில் அமைந்திருந்தது, ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.
தொடர்ந்து, புதுமையான நடையுடன் ஆரம்பித்தது சிருங்கார பக்தி வர்ணம். சதுஸ்ர திஸ்ரமுமாக மாறி மாறி திரிகால ஜதி அமைய, விறுவிறுப்போடு சஞ்சாரி விரைந்து வர வேண்டும் அய்யனே என, அழகாக பொருந்தியது.
மதுராபுரிவளர் சுந்தரேஸ்வரரின் பெருமைகளை கூற, பிட்டுக்கு மண் சுமந்த பெருமான் பிரம்படி பட்ட கதை, சஞ்சாரியில் இடம் பெற்றிருந்தது. பாய்ந்து ஆடிட முத்தாய் ஸ்வரம் அமைய, காமனின் மலர் கணைகளில் இருந்து என்னை காக்க வேண்டும் என, சரணம் ஆரம்பித்தது.
நாயகனின் வரவுக்காக நாயகி, தன்னையும் தன் சுற்றுப்புறத்தையும் அலங்கரிக்கும் வண்ணம் சிருங்காரம் ததும்ப அமைந்திருந்தன சரணசாகித்யமும், நாட்டியமும்.
குரலிசையில் ஸ்ரீ கோமதி நாயகம் மதுவந்தி ராகம் பாட, சிகை அலங்காரத்தோடு ஆரம்பித்தது பதம். முக்தா நாயகியாக, கிருஷ்ணனை நாயகனாக கொண்டு திஸ்ர திருபுடை தாளத்தில், ரம்மியமாக இருந்தது.
பந்தனைநல்லுார் பாண்டியன் நட்டுவாங்கமும், மாயவரம் விஸ்வநாதருடைய மிருதங்கமும் நாட்டிய அடவு அமைப்புகளை தெளிவாக காட்ட, ஸ்ரீ தேவராகன் குழலிசையோடு செஞ்சுட்டி தில்லானா நடந்தது.
ஜதியும், பல்லவியும் மாறி மாறி அமைந்து வேகமூட்ட, பெரிய தாள கோர்வைகளோடு அற்புதமாக நிறைவடைந்தது, அர்ச்சனாவின் நாட்டிய கச்சேரி. மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் ஹாலில் சிக்கலான கணக்குகளோடு, அற்புதமாக அமைந்திருந்தது இந்த நாட்டிய நிகழ்ச்சி.
-மா.அன்புக்கரசி,
ஈரோடு.