/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆண்டுக்கு 3 டி.எம்.சி.,கூட நீர் தராத ஆந்திரா தமிழக அரசு மவுனம்; விவசாயிகள் அதிருப்தி ஆண்டுக்கு 3 டி.எம்.சி.,கூட நீர் தராத ஆந்திரா தமிழக அரசு மவுனம்; விவசாயிகள் அதிருப்தி
ஆண்டுக்கு 3 டி.எம்.சி.,கூட நீர் தராத ஆந்திரா தமிழக அரசு மவுனம்; விவசாயிகள் அதிருப்தி
ஆண்டுக்கு 3 டி.எம்.சி.,கூட நீர் தராத ஆந்திரா தமிழக அரசு மவுனம்; விவசாயிகள் அதிருப்தி
ஆண்டுக்கு 3 டி.எம்.சி.,கூட நீர் தராத ஆந்திரா தமிழக அரசு மவுனம்; விவசாயிகள் அதிருப்தி
ADDED : மே 20, 2025 01:53 AM
சென்னை, ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தர வேண்டிய ஆந்திர அரசு, 3 டி.எம்.சி., கூட தராமல் உள்ளது. இதை கண்டு கொள்ளாமல், தமிழக அரசு மவுனம் காத்து வருவதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ஆந்திரா - தமிழகம் இடையே, 1983ம் ஆண்டு தெலுங்கு கங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஆண்டுதோறும் 12 டி.எம்.சி., கிருஷ்ணாநீரை, கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு வழங்க வேண்டும். இந்த நீரை கொண்டுவர 177 கி.மீ.,க்கு கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.
ஒப்பந்தப்படி, 1996ம் ஆண்டு முதல் கிருஷ்ணா நீர் தமிழகம் வந்து கொண்டு இருக்கிறது. கால்வாய் பராமரிப்பு கட்டணமாக ஆண்டுதோறும், 10 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கி வருகிறது.
ஆனால், ஒப்பந்தப்படி 12 டி.எம்.சி., நீரை ஆந்திர அரசு வழங்குவது கிடையாது. கடந்த 2023-24ம் ஆண்டு 2.41 டி.எம்.சி., நீரும், 2024 - 25ம் ஆண்டில், 2.51 டி.எம்.சி., நீர் மட்டுமே, ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் எல்லையை கடந்து, தமிழகம் வந்துள்ளது.
நீர் திறப்பை ஆந்திரா குறைத்துவரும் நிலையில், அதை கண்டு கொள்ளாமல் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது.
கண்டலேறு அணையில் திறக்கப்படும் நீர் வரும் கிருஷ்ணா கால்வாயை ஒட்டி தமிழகம், ஆந்திரா எல்லையில் பலவகையான பயிர் சாகுபடி நடக்கிறது.
கால்வாயில் நீர் எடுக்க, ஆந்திர விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அவரகள், மோட்டார்களை பயன்படுத்தி நீரை உறிஞ்சி பாசனம் செய்கின்றனர்.
தமிழக விவசாயிகளுக்கு கால்வாயில் நீர் எடுக்க அனுமதி இல்லை. இருப்பினும், கால்வாயை ஒட்டிய பகுதிகளில், நிலத்தடிநீரை பயன்படுத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கால்வாயில் தொடர்ந்து நீரோட்டம் இருந்தால், நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். இதை பயன்படுத்தி சாகுபடி நடக்கும்.
ஆனால் ஆண்டுக்கு, 3 டி.எம்.சி.,க்கு குறைவாக நீர் கிடைப்பதால், நிலத்தடி நீர்மட்டம் இப்பகுதிகளில் குறைவாக உள்ளது. இதனால், சாகுபடிக்கு தேவையான நிலத்தடிநீர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதனால், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
***