ADDED : ஜன 05, 2024 12:29 AM
சென்னை, வாகன சோதனையின் போது, போதை மாத்திரை வைத்திருந்தவரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை, முத்தியால்பேட்டை போலீசார், நேற்று முன்தினம் இரவு,பிடாரியார் கோவில் தெரு மற்றும் ஜெயில் தெரு ஆகிய பகுதிகளில், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், வாகனத்தை சோதனையிட்டனர். அதில், 600 டைட்டல் உடல் வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.
தொடர்புடைய, மணலியைச் சேர்ந்த சுல்தான் அலாவுதீன், 32,என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து, மாத்திரைகள், மொபைல் போன் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.