/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பள்ளி வேன், கம்பெனி பேருந்து மோதல் மாணவர்கள், ஊழியர்கள் 43 பேர் காயம் பள்ளி வேன், கம்பெனி பேருந்து மோதல் மாணவர்கள், ஊழியர்கள் 43 பேர் காயம்
பள்ளி வேன், கம்பெனி பேருந்து மோதல் மாணவர்கள், ஊழியர்கள் 43 பேர் காயம்
பள்ளி வேன், கம்பெனி பேருந்து மோதல் மாணவர்கள், ஊழியர்கள் 43 பேர் காயம்
பள்ளி வேன், கம்பெனி பேருந்து மோதல் மாணவர்கள், ஊழியர்கள் 43 பேர் காயம்
ADDED : ஜூன் 15, 2025 12:31 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த புரிசை கிராமத்தில், பள்ளி வேனும், தொழிற்சாலை பேருந்தும் மோதிக் கொண்டதில், மாணவர்கள், ஊழியர்கள் என, 43 பேர் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில் ராமகிருஷ்ண வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. பள்ளி மாணவ - மாணவியருக்கு வசதியாக வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இதில், 20 மாணவ - மாணவியருடன் நேற்று மாலை 4:30 மணிக்கு புறப்பட்ட பள்ளி வேன், காஞ்சிபுரம் அடுத்த புரிசை கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போதும், ஸ்ரீபெரும்புதுாரில் அருகே உள்ள 'பாக்ஸ்கான்' தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி வந்த ஒப்பந்த பேருந்தும், பள்ளி வேனும் புரிசை கிராமத்தின் பிரதான சாலையில் மோதிக் கொண்டன.
இதில், பள்ளி மாணவ - மாணவியர் 18 பேரும், கம்பெனி ஊழியர்கள் 25 பேரும் படுகாயமடைந்தனர். இதை பார்த்து ஓடிவந்த கிராமவாசிகள், மாணவர்கள், ஊழியர்களை மீட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். சிலருக்கு லேசான காயமும், பலருக்கு பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
பொன்னேரிக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி, அங்கு போக்குவரத்துக்கு வழிவகை செய்தனர்.
விபத்து நடந்தது பற்றி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓட்டுனர்களிடம் விசாரிக்கின்றனர். காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், மருத்துவமனைக்கு நேரில் சென்று, மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.