Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வேலை வாங்கி தருவதாக தில்லாலங்கடி பா.ஜ., பிரமுகர், 2 பெண்கள் சிக்கினர்

வேலை வாங்கி தருவதாக தில்லாலங்கடி பா.ஜ., பிரமுகர், 2 பெண்கள் சிக்கினர்

வேலை வாங்கி தருவதாக தில்லாலங்கடி பா.ஜ., பிரமுகர், 2 பெண்கள் சிக்கினர்

வேலை வாங்கி தருவதாக தில்லாலங்கடி பா.ஜ., பிரமுகர், 2 பெண்கள் சிக்கினர்

ADDED : ஜூன் 09, 2025 02:07 AM


Google News
Latest Tamil News
சென்னை:சென்னை, சந்தோஷ்புரத்தைச் சேர்ந்தவர் ராமசுப்ரமணியன், 72. இவர், பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.

அதில் அவர் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:

என் மகன் வெங்கடாசலத்திற்கு, பக்கத்து வீட்டில் வசிக்கும் லதா மற்றும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பா.ஜ., மாவட்ட செயலர் ஜெயச்சந்திரன் ஆகியோர், 2023ம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறினர்.

முதல் வேலை


இதற்காக, மூன்று தவணைகளாக, 12 லட்சம் ரூபாய் பெற்று, துப்புரவு ஆய்வாளருக்கான பணி நியமன ஆணை மற்றும் அடையாள அட்டையை கொடுத்து, ஜோஷிதா என்ற மாநகராட்சி பெண் அலுவலரை அறிமுகப்படுத்தினார்.

'ஜோஷிதா வேலைக்கான பயிற்சி அளிப்பதுடன் மாதச் சம்பளம் பிடித்தம் போக, 42,000 ரூபாயை கொடுப்பார்; பணி நிரந்தரமான பின் வங்கி வாயிலாக வழங்கப்படும்' என்றார்.

அதன்படி, 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2024ம் ஆண்டு ஜூலை மாதம் வரை, தினமும் பல்வேறு பகுதிகளில் உள்ள குப்பை தொட்டிகளை மொபைல் போனில் படமெடுத்து செயிலியில் பதிவிட்டு, மாதம் 42,000 பெற்று வந்தார்.

இரண்டாவது வேலை


பின் ஜோஷிதா, கவுரி என்ற மாநகராட்சி அதிகாரியை அறிமுகப்படுத்தி, உதவி செயற்பொறியாளர் பணி காலியாக இருப்பதாகவும், 4 லட்சம் ரூபாய் கொடுத்தால் வாங்கி தருவாக கூறியதன்படி, 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணத்தை கொடுத்தேன்.

அதன்படி, 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வரை, 56,000 ரூபாய் சம்பளம் பெற்று வந்தார்.

மூன்றாவது வேலை


அதன்பின் மாநகராட்சியில் உதவி கமிஷனர் வேலை காலியாக உள்ளது; 10 லட்சம் கொடுத்தால் வாங்கி கொடுப்பதாக கூறியதை அடுத்து, ஜோஷிதா மற்றும் கவுரியிடம் பணத்தை கொடுத்தேன்.

ஆனால், ஏப்ரம் மாதம் இருவரும் வாக்குறுதி அளித்தபடி சம்பளம் தரவில்லை. இதை கேட்க, மகனுடன் நேரில் சென்றபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தது மட்டுமல்லாமல், மேலும் 14 லட்சம் ரூபாய் வேண்டும் என, மிரட்டினர்.

சந்தேகமடைந்த நான், மாநகராட்சி தலைமையிடத்தில் விசாரித்தபோது, போலியான பணி நியமன ஆணை மற்றும் அடையாள அட்டை என்பது தெரியவந்தது.

எனவே, மோசடியில் ஈடுபட்ட மூவர் மீதும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

பெரியமேடு போலீசாரின் விசாரணையில், சிந்தாதிரிப்பேட்டை கலவை செட்டி தெருவைச் சேர்ந்த ஜோஷிதா, 28, ராஜகோபால் தெருவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், 42, குட்டி தெருவைச் சேர்ந்த ரேவதி, 45, ஆகிய மூவரும், கூட்டு சேர்ந்து வெங்கடாசலம் உட்பட 23 பேரிடம் இருந்து, 1.35 கோடி ரூபாய் வரை பெற்று, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

நேற்று மூவரையும் கைது செய்த போலீசார், 29 கிராம் நகை, ஹோண்டா 'டியோ' இருசக்கர வாகனம், அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us