/உள்ளூர் செய்திகள்/சென்னை/வட சென்னைக்கு ரூ.1,200 கோடி திட்டம்... என்னாச்சு? எந்த பணியும் துவங்காததால் அதிருப்திவட சென்னைக்கு ரூ.1,200 கோடி திட்டம்... என்னாச்சு? எந்த பணியும் துவங்காததால் அதிருப்தி
வட சென்னைக்கு ரூ.1,200 கோடி திட்டம்... என்னாச்சு? எந்த பணியும் துவங்காததால் அதிருப்தி
வட சென்னைக்கு ரூ.1,200 கோடி திட்டம்... என்னாச்சு? எந்த பணியும் துவங்காததால் அதிருப்தி
வட சென்னைக்கு ரூ.1,200 கோடி திட்டம்... என்னாச்சு? எந்த பணியும் துவங்காததால் அதிருப்தி
ADDED : ஜூலை 05, 2024 12:00 AM

வட சென்னை வளர்ச்சிக்காக 4,181 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு, 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் துவங்குவதாக அறிவித்து ஓராண்டை கடந்தும், இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. பல திட்டங்களுக்கு வரைபடங்கள் மட்டுமே தயாராகி உள்ளன. நிதி ஒதுக்கீடு, பணிகள் துவங்குவது எப்போது என்ற எதிர்பார்ப்பில் வடசென்னைவாசிகள் காத்திருக்கின்றனர்.
வட சென்னையில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதற்காக, 2023 - 24 பட்ஜெட்டில், 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வட சென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான நிதியை சி.எம்.டி.ஏ., வழங்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டது.
இதன் அடிப்படையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
எந்த பகுதிக்கு என்ன வகையான திட்டம் தேவை என்பதை, மக்களின் கருத்து அடிப்படையில் முடிவு செய்ய சி.எம்.டி.ஏ., இந்த நடவடிக்கையை எடுத்தது. இவ்வாறு பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில், கள நிலையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக, பொதுப்பணி, நீர் வளம், மாநகராட்சி, கல்வி, சுகாதாரம் மற்றும் நெடுஞ்சாலை என, பல துறைகளின் கருத்துகளும் கேட்கப்பட்டன. இந்த துறைகள் சார்பில், ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த பின்னணியில், 11 துறைகள் சார்பில் அளிக்கப்பட்ட பரிந்துரைகள் அடிப்படையில், வார்டு வாரியாக தேவைப்படும் திட்டங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதன்படி, 11 அரசு துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட உள்ள 249 திட்டங்கள் பட்டியலிடப்பட்டன.
இத்திட்டங்களுக்கான உத்தேச மதிப்பீடு அடிப்படையில், 8,455.60 கோடி ரூபாய் தேவைப்படும் என கணக்கிடப்பட்டது. இந்த வரைவு அறிக்கை அடிப்படையில், பல்வேறு நிலைகளில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 4,181 கோடி ரூபாய் ஒதுக்க முடிவானது.
இதன்படி, முதற்கட்டமாக, 1,200 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அடிக்கல் நாட்டினார்.
வட சென்னையின் பல்வேறு பகுதிகள் எவ்வாறு மாற்றப்பட உள்ளன என்பது தொடர்பான வரைபடங்கள் வெளியாகி உள்ளன.
திட்டங்கள் அறிவிக்கப்பட்டு ஓராண்டு கடந்தும், வரைபடங்கள் மட்டுமே வெளிவருவதும், இன்னும் ஒரு பணி கூட கட்டுமான அளவில் துவங்கப்படாமல் இருப்பதும், வடசென்னைவாசிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
வட சென்னை வளர்ச்சிக்காக, தமிழக அரசு இந்த அளவுக்கு நிதி ஒதுக்கி சிறப்பு திட்டங்கள் மேற்கொள்வது வரவேற்கத்தக்கது. அறிவிப்பு வெளியாகி, சில மாதங்களில் பணிகள் துவங்கும் என எதிர்பார்த்தோம்.
ஆனால், அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட், மானிய கோரிக்கை விவாதங்களும் முடிந்த நிலையில், அதற்கு முந்தைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இன்னும் ஒரு பணியும் துவங்கவில்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.
தற்போது, இத்திட்ட பணிகள் மூன்று ஆண்டுகளில் முடிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஆனால், தற்போதைய அரசின் பதவிக்காலம், 2026ல் முடிய உள்ள நிலையில், மூன்று ஆண்டுகளில் இத்திட்ட பணிகள் முறையாக முடிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கற்பனை பார்வையில் எப்படி மாறப்போகிறது வடசென்னை வட சென்னையில் பல்வேறு பிரதான சாலைகள் எப்படி மாறப்போகின்றன என்பது தொடர்பான வரைபடங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
- நமது நிருபர் -