/உள்ளூர் செய்திகள்/சென்னை/ புதுார் சுண்ணாம்பு குளம் கபளீகரம் மீட்டெடுக்குமா மாநகராட்சி? புதுார் சுண்ணாம்பு குளம் கபளீகரம் மீட்டெடுக்குமா மாநகராட்சி?
புதுார் சுண்ணாம்பு குளம் கபளீகரம் மீட்டெடுக்குமா மாநகராட்சி?
புதுார் சுண்ணாம்பு குளம் கபளீகரம் மீட்டெடுக்குமா மாநகராட்சி?
புதுார் சுண்ணாம்பு குளம் கபளீகரம் மீட்டெடுக்குமா மாநகராட்சி?
ADDED : மார் 13, 2025 11:38 PM

அம்பத்துார்,அம்பத்துார் புதுாரில் அமைந்துள்ள, 100 ஆண்டுகள் பழமையான சுண்ணாம்பு குளம், ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்படுவதை, மாநகராட்சியும், வருவாய்த்துறையும் தடுத்து சீர்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மாநகராட்சியின், அம்பத்துார் மண்டலம், 80வது வார்டில், புதுார் அருகே சுண்ணாம்பு குளம் உள்ளது. இந்த குளம், 100 ஆண்டுகளுக்கு முன், பாசனத்திற்கான நீர் ஆதாரமாக இருந்தது. நகர மயமாக்கலால் விவசாயம் கைவிடப்பட்டு, ஏரியை சுற்றியும் குடியிருப்புகள் அதிகரித்துள்ளன.
ஆக்கிரமிப்பில் சிக்கி, சுண்ணாம்பு குளம் சிறுக சிறுக மாயமாகியுள்ளது. இதை, சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், வருவாய்த்துறையினரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், 1.20 ஏக்கர் பரப்பளவில் இருந்த குளம் தற்போது, 1 ஏக்கரை விட குறைந்துவிட்டது.
அம்பத்துார் நகராட்சியாக இருந்தபோது, ஆக்கிரமிப்பை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சென்னை மாநகராட்சியில் இணைந்த பிறகாவது நடவடிக்கை இருக்குமா என்றால் இல்லை. இருக்கும் மீத குளமும் ஆக்கிரமிப்பில் சிக்கி வருகிறது.
குளங்களை மீட்டெடுக்க, 2019ம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, எட்டு துறை நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு, 'மாயமான குளங்கள், ஆக்கிரமிப்பில் உள்ள குளங்களை வருவாய்த்துறை மீட்டெடுத்து, மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். மாநகராட்சி வசம் உள்ள குளங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால் அதை அகற்றி, சுற்றிலும் தடுப்பு அமைத்து பாதுகாக்க வேண்டும்' என, பரிந்துரைத்தது.
நீர்நிலைகளை மீட்டெடுக்க, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஆறு ஆண்டுகள் ஆகியும், சென்னை மாநகராட்சியும், வருவாய்த்துறையினரும் சுண்ணாம்பு குளத்தை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்தாண்டு டிசம்பர், 20ம் தேதி, அம்பத்துாரில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை துவக்கி வைத்த மேயர் பிரியா, சுண்ணாம்பு குளத்தை பார்வையிட்டார். சுண்ணாம்பு குளத்தை அளவீடு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க, மண்டல அதிகாரிகள், வருவாய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மூன்று மாதங்களாகியும் குளத்தை அளவீடு செய்யாமல், வருவாய்த் துறையினர் கிடப்பில் போட்டுள்ளனர்.
இனியாவது, குளத்தை மீட்க மாநகராட்சியும், வருவாய்த்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அதிகாரிகள் தயக்கம்
பல ஆண்டுகளுக்குமுன், குளத்திற்கு சென்றுவர நான்கு பக்கமும் வழி இருந்தது. தற்போது, ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், மூன்று அடிக்கும் குறைவான அகலம் கொண்ட ஒரு வழி மட்டுமே உள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறையினருக்கு பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆக்கிரமிப்பாளர்களின் அழுத்தத்தால், நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குகின்றனர்.
- ராஜேஷ், 37, புதுார்.