/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சோழவரம் சாகசத்தில் இருவர் பலியான விவகாரம்...மறைப்பது ஏன்? சென்னையில் அதகளப்படும் ஆட்டோ, பைக் ரேஸ் சோழவரம் சாகசத்தில் இருவர் பலியான விவகாரம்...மறைப்பது ஏன்? சென்னையில் அதகளப்படும் ஆட்டோ, பைக் ரேஸ்
சோழவரம் சாகசத்தில் இருவர் பலியான விவகாரம்...மறைப்பது ஏன்? சென்னையில் அதகளப்படும் ஆட்டோ, பைக் ரேஸ்
சோழவரம் சாகசத்தில் இருவர் பலியான விவகாரம்...மறைப்பது ஏன்? சென்னையில் அதகளப்படும் ஆட்டோ, பைக் ரேஸ்
சோழவரம் சாகசத்தில் இருவர் பலியான விவகாரம்...மறைப்பது ஏன்? சென்னையில் அதகளப்படும் ஆட்டோ, பைக் ரேஸ்
ADDED : ஜூன் 17, 2024 11:19 PM

சோழவரம் : வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இரு நாட்களுக்கு முன் நடந்த ஆட்டோ மற்றும் பைக் ரேஸில், வாலிபர்கள் இருவர் இறந்தனர். அவ்வழியில் அடிக்கடி ரேஸ் நடத்தி அதகளம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்காமல், தங்கள் பொறுப்பை போலீசார் தட்டிக்கழிப்பதாகவும், ரேஸால் நடக்கும் விபத்துகளை மறைப்பதாகவும், வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர், அத்திப்பட்டு, மணலி புதுநகர் பகுதிகளைச் சேர்ந்தோர் சென்னைக்கு சென்று வருவதற்காகவும், வாகன போக்குவரத்திற்காகவும் மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலை, 2020ல் அமைக்கப்பட்டது.
இச்சாலை 62 கி.மீ., துாரம் உடையது. 400 அடி அகலம் உடையது. கனரக வாகனங்கள் செல்வதற்காக, இவ்வாறு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சாலையில், விடுமுறை நாட்களில் போக்குவரத்து நடமாட்டம் ஓரளவுக்கு குறைவாக இருக்கும். இதனால், பரந்து விரிந்த இந்த சாலையில், ரேஸ் செய்வதற்காக, இளைஞர்கள் பலரும் குவிந்து வருகின்றனர்.
வாரந்தோறும் சனிக்கிழமைகளில், இச்சாலையில் நடத்தப்படும் பைக் மற்றும் ஆட்டோ ரேஸ்களால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
அதிக வேகமாக பயணிப்பது, வீலிங் செய்வது, ஒருவரை ஒருவர் முந்தி செல்வதில் போட்டி போடுவது என, பைக் சாகசங்களில் அவர்கள் ஈடுபட்டு அதகளம் செய்கின்றனர்.
இதனால், மற்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது; ரேஸில் ஈடுபடுவோர் இறக்கவும் நேரிடுகிறது. கடந்த, 15ம் தேதி இரவும், அப்படி ஒரு மோசமான சம்பவம் நடந்துள்ளது.
வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, சோழவரம் அடுத்த அருமந்தை பகுதியில், இளைஞர்கள் சிலர் உயர் ரக பைக்கில் ரேஸ் சென்றனர். அதேபோல், ஆட்டோ ரேஸ் பந்தயமும் நடந்துள்ளது.
வாகனங்களை முந்திச் செல்லும் ஆர்வத்தில் வேகமாக சென்ற இரு பைக்குகள் குறுக்கே ஆட்டோ வந்ததால், திடீர் விபத்திற்குள்ளானது. இதில் நிலை தடுமாறி விழுந்த குன்றத்துாரைச் சேர்ந்த மணி, 22, அம்பத்துார் ஷ்யாம் சுந்தர், 24, ஆகியோர், சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
பெசன்ட் நகரைச் சேர்ந்த மோகன கிருஷ்ணன், 30, மாரிமுத்து, 32, மாங்காடு ஜெபேயர், 20, ஆகியோர் பலத்த காயமடைந்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வார விடுமுறை நாட்களில் நடக்கும் இளைஞர்களின் பைக் சாகசங்களால், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு, பெரும் இடையூறு ஏற்படுகிறது.
இதனால் அவர்களும், விபத்துகளில் சிக்கி உயிர் பலியாகும் அபாயம் உள்ளது. இதற்கு கடிவாளம் அமைக்க வேண்டும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
போக்குவரத்து நிறைந்த வண்டலுார் வெளிவட்ட சாலையை கண்காணிக்க வேண்டிய உள்ளூர் சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், தொடர்ந்து அலட்சியம் காட்டுகின்றனர்.
ரேஸ்களால் பலமுறை விபத்து நடந்துள்ளது குறித்து, ஆவடி கமிஷனரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்கப்பட்டு உள்ளது; ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ரேஸ் நடப்பதால் ஏற்படும் விபத்துகளை மறைத்து வருகின்றனர்.
தவிர, எந்தந்த பகுதிகளில் பைக் சாகசங்கள் நடக்கின்றன என்பதை, போலீசார் அறிந்தும், கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
உரிய கண்காணிப்பு இருந்திருந்தால், இரண்டு உயிர்பலியை தவிர்த்திருக்கலாம். வரும் நாட்களில் இதுபோன்ற அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ரேஸ் நடக்காமல் இருக்க, போலீசாரின் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கண்காணிப்பு
ரேஸில் ஈடுபட்டோரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். பைக்குகள் மற்றும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்து, அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், பைக் மற்றும் ஆட்டோ ரேஸ் நடப்பதை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.
- சங்கர், ஆவடி கமிஷனர்