Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'வார் ரூம்' யுக்தியை பயன்படுத்தி அதிக ஓட்டு வித்தியாசத்தில் முதலிடம்

'வார் ரூம்' யுக்தியை பயன்படுத்தி அதிக ஓட்டு வித்தியாசத்தில் முதலிடம்

'வார் ரூம்' யுக்தியை பயன்படுத்தி அதிக ஓட்டு வித்தியாசத்தில் முதலிடம்

'வார் ரூம்' யுக்தியை பயன்படுத்தி அதிக ஓட்டு வித்தியாசத்தில் முதலிடம்

UPDATED : ஜூன் 06, 2024 06:42 AMADDED : ஜூன் 06, 2024 12:22 AM


Google News
Latest Tamil News
கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களம் கண்டவர் சசிகாந்த் செந்தில், 44. பொறியியல் பட்டம் படித்த இவர், 2009ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஆக தேர்வானார். 2009 - 2019 வரை கர்நாடகா மாநிலத்தில் பணியாற்றினார்.

அதன்பின், 2019ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வலுசேர்க்கும் முக்கிய பொறுப்புகளில் அங்கம் வகித்தவர், காங்கிரஸ் கட்சியின் தேசிய 'வார் ரூம்' தலைவராக இருந்து வருகிறார்.

பேச்சாளர், எழுத்தாளர், ஆராய்ச்சியாளர் என, பன்முக திறமை கொண்ட இவர், காங்கிரஸ் கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் முக்கிய அங்கம் வகித்து வருகிறார்.

கர்நாடகா மாநிலத்தில், 2023ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்ற திட்டம் வகுத்து கொடுத்ததில், இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

கர்நாடகா தேர்தலில் இவர் கடைப்பிடித்த வார் ரூம் யுக்தியை, தற்போது போட்டியிட்ட திருவள்ளூர் லோக்சபா தொகுதியிலும் கையாண்டார்.

அதன் பலனாக, தற்போது வெளியான தேர்தல் முடிவுகளில், தமிழகத்தில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார்.

தற்போதைய லோக்சபா தேர்தலில், மொத்தம் 7,96,956 ஓட்டு பெற்று, 5,72,155 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் 'டிபாசிட்' இழந்துள்ளனர்.

'கூட்டணி கட்சியினரிடம் போதிய ஒத்துழைப்பு இல்லை' என்ற விமர்சனம் இருந்து வந்த நிலையில், எப்படி இந்த இமாலய வெற்றி பெற்றார் என்பது, தி.மு.க., உட்பட அனைத்து கூட்டணி கட்சியினரையும் வியப்படைய செய்துள்ளது.

ஓராண்டு உழைப்பு


திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், வேட்பாளர் அறிவித்த பின்னரே தொகுதி மக்களுக்கு சசிகாந்த் செந்திலை தெரிந்தது. ஆனால், தனக்கான தொகுதி திருவள்ளூர் என்பதை ஓராண்டுக்கு முன் உறுதி செய்து கொண்டார்.

அப்போதிருந்தே, திருவள்ளூர் தொகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி முக்கிய பிரமுகர்களை, வார் ரூம் தலைவர் என்ற அறிமுகத்துடன் கலந்து பேசி தொகுதியை பற்றி தெரிந்து கொண்டார். தொடர்ந்து, தொகுதிக்கு உட்பட்ட கிராம பகுதிகளுக்கு நேரடியாக சென்று, மக்களோடு மக்களாக கலந்து பேசி குறைகளை கேட்டறிந்தார்.

அரசியல் மீதும், அரசியல்வாதிகள் மீதும் மக்கள் மத்தியில் உள்ள எண்ண ஓட்டம், அவர்களின் எதிர்பார்ப்புகள் என்பது குறித்து சர்வே எடுத்துள்ளார்.

தொகுதி உறுதியானதும், அதிக ஓட்டு வித்தியாசம் என்ற இலக்குடன், தனக்கான வார் ரூம் குழு அமைத்து, களம் கண்டார். சமூக ஊடகங்கள், போஸ்டர்கள், துண்டு பிரசுரம் என, அனைத்திலும் புதுமையை புகுத்தி, வாக்காளர் மனதில் இடம் பிடித்தார்.

அனைத்து கிராம பகுதிகளுக்கு நேரடியாக சென்றார். அவருக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து அளிக்கும் பேட்டிகளை வீடியோ எடுத்து, தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் வாயிலாக, சமூக ஊடகங்களில் பரப்ப செய்தார்.

தேர்தல் நெருங்கும் போது, அனைத்து வாக்காளர்களின் விருப்ப வேட்பாளராக மாறினார். அதன் வெளிப்பாடே இந்த இமாலய வெற்றி என, காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us