/உள்ளூர் செய்திகள்/சென்னை/ காஞ்சி மேயர் ஆதரவாளர்கள் இருவர் தி.மு.க.,வில் நீக்கம் காஞ்சி மேயர் ஆதரவாளர்கள் இருவர் தி.மு.க.,வில் நீக்கம்
காஞ்சி மேயர் ஆதரவாளர்கள் இருவர் தி.மு.க.,வில் நீக்கம்
காஞ்சி மேயர் ஆதரவாளர்கள் இருவர் தி.மு.க.,வில் நீக்கம்
காஞ்சி மேயர் ஆதரவாளர்கள் இருவர் தி.மு.க.,வில் நீக்கம்
ADDED : ஜூலை 27, 2024 12:35 AM
காஞ்சிபுரம், - காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் ஆதரவாளர்கள் இருவர் தி.மு.க.,விலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், வரும் 29ல் நடைபெறும் மேயர் மீதான ஓட்டெடுப்பு, வெளிப்படை ஓட்டெடுப்பாக நடக்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, வரும் 29ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் மற்றும் அவர் பதவி மீதான ஓட்டெடுப்பும் நடக்க உள்ளது. மேயருக்கு எதிராக, தி.மு.க.,வினர் உள்பட 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கட்சியின் அமைப்பு செயலர் அன்பகம் கலை, பொன்னேரிக்கரையில் உள்ள நட்சத்திர விடுதியில் தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்களிடம் சமரசப்பேச்சு நடத்தினார். ஆனால், முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில், தி.மு.க.,வின், காஞ்சிபுரம் மாவட்ட பிரதிநிதி பிரகாஷ், மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் டில்லிகுமார் ஆகிய இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கி, பொதுச்செயலர் துரைமுருகன் நேற்று அறிவித்துள்ளார். இவர்கள் இருவரும், மேயர் மகாலட்சுமியின் கணவரும், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளருமான யுவராஜின் ஆதரவாளர்கள். அதிருப்தி கவுன்சிலர்களின் குற்றச்சாட்டுக்களே இருவரின் நீக்கத்திற்கு காரணம் என, கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம், திங்கட்கிழமை நடைபெற உள்ள நிலையில், ஆக., 6ல், பணிக்குழு தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. பணிக்குழுவின் தலைவராக இருந்த மேயர் அதிருப்தி கவுன்சிலர் சுரேஷ் மீண்டும் போட்டியிடுவாரா அல்லது வேறு கவுன்சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பதை மேலிடம் முடிவு செய்யும் என, கட்சியினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே, காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், காஞ்சிபுரம் அ.தி.மு.க., கவுன்சிலர் சிந்தன் மனு தாக்கல் செய்தார். மனு, நீதிபதி பவானி சுப்பராயன் முன், விசாரணைக்கு வந்தது. வரும் 29ல் நடப்பதாக அறிவிக்கப்பட்ட கூட்டத்துக்கு தடை விதிக்க, நீதிபதி மறுத்து விட்டார்.