/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மெட்ரோ பணியால் சேதமடைந்த வடிகால்களை சீரமைக்க... காலக்கெடு! பருவமழைக்கு முன் சாலைகளையும் செப்பனிட வலியுறுத்தல் மெட்ரோ பணியால் சேதமடைந்த வடிகால்களை சீரமைக்க... காலக்கெடு! பருவமழைக்கு முன் சாலைகளையும் செப்பனிட வலியுறுத்தல்
மெட்ரோ பணியால் சேதமடைந்த வடிகால்களை சீரமைக்க... காலக்கெடு! பருவமழைக்கு முன் சாலைகளையும் செப்பனிட வலியுறுத்தல்
மெட்ரோ பணியால் சேதமடைந்த வடிகால்களை சீரமைக்க... காலக்கெடு! பருவமழைக்கு முன் சாலைகளையும் செப்பனிட வலியுறுத்தல்
மெட்ரோ பணியால் சேதமடைந்த வடிகால்களை சீரமைக்க... காலக்கெடு! பருவமழைக்கு முன் சாலைகளையும் செப்பனிட வலியுறுத்தல்
ADDED : ஜூன் 11, 2024 11:34 PM

சென்னை : வடகிழக்கு பருவமழைக்கு முன், மெட்ரோ பணியின்போது சேதமடைந்த மழைநீர் வடிகால்களை சீரமைக்கும்படி, சென்னை மாநகராட்சி கெடு விதித்துள்ளது. மேலும், வரும் அக்டோபர் மாதத்திற்குள் நீர்நிலைகள், மழைநீர் வடிகால்கள் துார்வாரும் பணியை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரதான மற்றும் உட்புற சாலைகளில், 2,624 கி.மீ., துார மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும், மாநில பேரிடர் நிதி, சிங்கார சென்னை நிதி, மாநகராட்சி நிதி ஆகியவற்றின் வாயிலாக, மாம்பலம் கால்வாய், கோவளம் மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதி என, மொத்தம் 1,139 கி.மீ., துாரத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், தீவிரமாக நடந்து வருகின்றன. இப்பணிகள், 2026க்குள் முடிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மழைநீர் வடிகால் கட்டமைப்பு மற்றும் 33 சிறிய நீர்நிலைகள், கூவம், அடையாறு, பகிங்ஹாம், கொசஸ்தலையாறு ஆகிய வடிநிலப்பகுதிகள் இருந்தாலும், சென்னையில் ஒவ்வொரு வடகிழக்கு பருவமழையின்போதும், வெள்ள பாதிப்பு தவிர்க்க முடியாததாகி உள்ளது.
குறிப்பாக, திடீர் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மழை பொழிவிற்கே, சென்னை தத்தளித்து வருகிறது.
எனவே, வரும் பருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மண்டலத்துக்கு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மழைநீர் வடிகால் துார்வாரப்படுகிறது. முதற்கட்டமாக 1,242 கி.மீ., துார மழைநீர் வடிகால்கள் துார்வாரும் பணி துவக்கப்பட்டு, 755 கி.மீ., வரை துார்வாரப்பட்டுள்ளது.
அதேபோல், 87,719 மேன்ஹோல்களில், 37,023 ல் துார்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் துார்வாரும் பணி நடந்து வரும் நிலையில், அக்., மாதத்திற்குள் துார்வாரும் பணியை முடிக்க மாநகராட்சி காலக்கெடு விதித்துள்ளது.
எச்சரிக்கை
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் கன மழை பெய்து நின்றபின், சில இடங்களில் இரண்டு மணி நேரத்தில் மழைநீர் வடிந்து விடுகிறது.
ஆனால், மிக குறைந்த நேரத்தில் அதிக மழை பதிவாகும் பட்சத்தில், மழைநீர் தேங்கும் நிலை உள்ளது. ஏற்கனவே, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகள் என, 40 இடங்கள் வரை உள்ளன.
மேலும், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பணிகள் நடைபெறுவதால், பல இடங்களில் சாலை சேதமடைந்து படுமோசமாக உள்ளது. மழைக் காலங்களில், சாலைகள் சேறும், சகதியுமாக அபாயகரமாக மாறும் நிலை உள்ளது.
அதேபோல, மெட்ரோ ரயில் பணியால், பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வரும் மழைக்காலத்தில், மயிலாப்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே, மழைக்காலத்திற்கு முன், சாலை மற்றும் வடிகாலை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சென்னையில் மழைநீர் வடிகால் மற்றும் நீர்நிலைகள் துார்வாரும் பணி நடந்து வருகின்றன. இப்பணிகளை அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மெட்ரோ போன்ற வளர்ச்சி பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் அங்கு மேற்காள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்தும், தொடர்ந்து கண்காணிக்கும்படி அந்தந்த மண்டல அலுவலர்கள், பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.