/உள்ளூர் செய்திகள்/சென்னை/திருவொற்றியூர் அ.தி.மு.க.,வில் அணி மாறிய வட்டச்செயலர் திருவொற்றியூர் அ.தி.மு.க.,வில் அணி மாறிய வட்டச்செயலர்
திருவொற்றியூர் அ.தி.மு.க.,வில் அணி மாறிய வட்டச்செயலர்
திருவொற்றியூர் அ.தி.மு.க.,வில் அணி மாறிய வட்டச்செயலர்
திருவொற்றியூர் அ.தி.மு.க.,வில் அணி மாறிய வட்டச்செயலர்
ADDED : ஜூலை 05, 2024 12:31 AM

திருவொற்றியூர், வட்டச்செயலர், சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது, திருவொற்றியூர் அ.தி.மு.க., வில், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர், திருச்சிணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் செபஸ்டின், 47, அ.தி.மு.க., திருவொற்றியூர் கிழக்கு பகுதி, 14 வது வட்டம் - மேற்கு வட்டச்செயலராக உள்ளார்.
இவர் மனைவி ஜெபமாலை மேரி, கடந்த கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.
அ.தி.மு.க.,வில் ஐந்து முறையாக 25 ஆண்டுகள் வட்டச்செயலராக இருக்கும் செபஸ்டின், நேற்று முன்தினம், தன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன், போயஸ் கார்டனில் உள்ள சசிகலா வீட்டிற்கு சென்று, அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதுகுறித்து, செபஸ்டின் கூறியதாவது:
தலைமை கட்சி தொண்டனை மதிக்கவில்லை. மாவட்டச் செயலர்களை மட்டும் கையில் வைத்துக் கொண்டு, கட்சி நடத்த முயற்சிக்கின்றனர்.
அது முடியாது. கட்சியை திறம்பட வழிநடத்த சசிகலாவால் மட்டுமே முடியும். திருவொற்றியூரில் மேலும் பல, வட்டச்செயலர்கள், நிர்வாகிகள் அடுத்தடுத்து, அவரை நேரில் சந்திப்பர்.
அதற்கான, ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விரைவில், அ.தி.மு.க., நிர்வாகிகள் பெரும்பாலானோர், சசிகலாவை ஆதரிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதுகுறித்து, உள்ளூர் அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
மாதவரம் - திருவொற்றியூர் சட்டசபை தொகுதிகளை இணைத்து, அ.தி.மு.க., மாவட்ட செயலராக, மாதவரம் மூர்த்தி உள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலில், பொறுப்பாளராக அவரே நியமிக்கப்பட்ட நிலையில், திருவொற்றியூர் சட்டசபை தொகுதியில், கடந்த தேர்தல்களைக் காட்டிலும், அ.தி.மு.க., ஓட்டு வங்கி அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது.
வட்டச் செயலர்கள், நிர்வாகிகளுக்கு, மாவட்டச் செயலர் சரியான வழிகாட்டுதல்கள் வழங்காததே இந்த வீழ்ச்சிக்குக் காரணம்.
கடந்த, கவுன்சிலர் தேர்தலில், வார்டுக்கு அறிமுகம் இல்லாத, மாற்றுக் கட்சியில் இருந்து வந்த பலருக்கும் 'சீட்' வழங்கியதால், 13, 14வது வார்டுகளில் தோல்வி ஏற்பட்டது.
இதனால், மாவட்டச் செயலர் மீது, உள்ளூர் அ.தி.மு.க.,வினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.