/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மண்டல வாரியாக மாட்டு தொழுவம் இடம் தேடுகிறது மாநகராட்சி மண்டல வாரியாக மாட்டு தொழுவம் இடம் தேடுகிறது மாநகராட்சி
மண்டல வாரியாக மாட்டு தொழுவம் இடம் தேடுகிறது மாநகராட்சி
மண்டல வாரியாக மாட்டு தொழுவம் இடம் தேடுகிறது மாநகராட்சி
மண்டல வாரியாக மாட்டு தொழுவம் இடம் தேடுகிறது மாநகராட்சி
ADDED : ஜூலை 25, 2024 12:26 AM
சென்னை, சென்னையில் உட்புற சாலை முதல் பிரதான சாலை வரை, கால்நடைகள் சர்வசாதாரணமாக உலா வருகின்றன. இவற்றால், இந்தாண்டு துவக்கம் முதல் விபத்து, உயிரிழப்பு சம்பவங்கள் ஏராளமாக நடந்தன. விபத்துகளின் சிசிடிவி கேமரா காட்சிகள் அதிர்ச்சியடைய செய்தன.
இதையடுத்து, சென்னையில் சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து வருகின்றனர். முதல்முறை, 5,000 ரூபாய்; இரண்டாம் முறை 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதேநேரம், தொடர்ந்து பிடிபடும் மாடுகளை பராமரிக்க மாநகராட்சியிடம் போதிய இடம் இல்லாததால், அபராதத்துடன் மீண்டும் மாடுகள் விடுவிக்கப்படுகின்றன. இதுபோன்ற நடவடிக்கையால், தொடர்ந்து மாடுகள் சாலையில் திரிவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் சுற்றித்திரியும் மாடுகளை ஒரே இடத்தில் வைத்து பராமரிக்க, திறந்தவெளி இடங்களில் தொழுவம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. இதற்காக, மண்டல வாரியாக இடங்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
இந்தாண்டில் இதுவரை 1,469 மாடுகள் பிடிக்கப்பட்டு, 6.29 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சென்னையில், மாடுகள் வளர்ப்போருக்கு, அவற்றை பராமரிக்க போதியளவில் இடங்கள் இருக்க வேண்டும். அப்போது தான், மாடுகள் வளர்க்க அனுமதிக்கப்படுவர்.
அவ்வாறு இடங்கள் இல்லாமல், பலர் கூவம், அடையாறு போன்ற நீர்நிலை ஓரங்களில் மாடுகளை பராமரித்து வருகின்றனர். அதேநேரம், சந்தை பகுதிகள், குடியிருப்புகள், பிரதான சாலைகளிலும் மாடுகளை திரிய விடுகின்றனர்.
இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, மண்டல வாரியாக பொது தொழுவம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான இடம் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த பொது தொழுவங்களில், குறைந்த வாடகையில், மாடுகளை பராமரித்துக் கொள்ள முடியும். மாடுகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களும் குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.