/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ராஜன் கண் மருத்துவமனை ஆண்டு விழாவில் சிறப்பு திட்டங்கள் ராஜன் கண் மருத்துவமனை ஆண்டு விழாவில் சிறப்பு திட்டங்கள்
ராஜன் கண் மருத்துவமனை ஆண்டு விழாவில் சிறப்பு திட்டங்கள்
ராஜன் கண் மருத்துவமனை ஆண்டு விழாவில் சிறப்பு திட்டங்கள்
ராஜன் கண் மருத்துவமனை ஆண்டு விழாவில் சிறப்பு திட்டங்கள்
ADDED : ஜூன் 22, 2024 12:23 AM

சென்னை, ராஜன் கண் மருத்துவமனையின் 29வது ஆண்டு விழா, சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நான்கு திட்டங்களை, அம்மருத்துவமனையின் தலைவர் மோகன் ராஜன், காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர் வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் டாக்டர் மோகன் ராஜன் பேசியதாவது:
புதிதாக துவங்கப்பட்டுள்ள 'கோட்' மையம், உலர்விழி, விழி வெண்படலம் மாற்று சிகிச்சை, லாசிக் அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான விழி வெண்திரை குறைபாடுகள் போன்ற பாதிப்புகளுக்கு பிரத்யேக சிகிச்சை மையமாக செயல்படும்.
அதேபோல், மயோபியா என்ற கிட்ட பார்வைக்கான பிரத்யேக மையமும் துவக்கப்பட்டு உள்ளது. இதில், முன்கூட்டியே கண்டறிதல், பாதிப்புக்கான பிரத்யேக சிகிச்சை அளிக்கப்படும்.
ஆர் கிறிஸ்டியன் நினைவு அறக்கட்டளையுடன் செய்துள்ள ஒப்பந்தத்தின் படி, ராஜன் கண் மருத்துவமனைக்கு, 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.
இந்நிதி வாயிலாக, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, இலவச மருத்துவ முகாம்கள், கண்புரை அறுவை சிகிச்சை, விழி வெண்படல மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
ஜெர்மனியை சேர்ந்த ஹெல்மேன் நிறுவனம், 18 இருக்கைகள் கொண்ட பிரத்யேக வாகனத்தை வழங்கியுள்ளது. இந்த வாகனம் வாயிலாக, தமிழகத்தில் ஏழு மாவட்டங்கள், ஆந்திராவில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த கிராமப்புற மக்களை கண் மருத்துவமனைக்கு அழைத்து வர பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், ''இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக இருக்கும் சென்னையில், ராஜன் கண் மருத்துவமனை துவங்கியுள்ள, புதிய மையங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., எழிலன், மருத்துவமனையின் செயல் மருத்துவ இயக்குனர் சுஜதா மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.