/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சவாரி குதிரைகள் வாயிலாக கடற்கரையில் கஞ்சா விற்பனை? மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு சவாரி குதிரைகள் வாயிலாக கடற்கரையில் கஞ்சா விற்பனை? மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
சவாரி குதிரைகள் வாயிலாக கடற்கரையில் கஞ்சா விற்பனை? மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
சவாரி குதிரைகள் வாயிலாக கடற்கரையில் கஞ்சா விற்பனை? மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
சவாரி குதிரைகள் வாயிலாக கடற்கரையில் கஞ்சா விற்பனை? மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூலை 30, 2024 12:51 AM

சோழிங்கநல்லுார், சென்னை மெரினாவுக்கு அடுத்தபடியாக, பெசன்ட் நகர் மற்றும் இ.சி.ஆர்., கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இ.சி.ஆரில், திருவான்மியூர் முதல் கானத்துார் வரை உள்ள பிரதான சாலையில் இருந்து செல்லும் தெருக்கள், கடற்கரையில் முடிகின்றன.
இதனால், பலதரப்பட்ட மக்கள், கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். மேலும், ரிசார்ட்கள் எனப்படும் விடுதிகள் அதிகமாக உள்ளதால், இரவு நேரத்திலும் கடற்கரையில் சுற்றுலா பயணியர் நடமாட்டம் இருக்கிறது.
இந்த கடற்கரையோர பகுதிகளில் சிலர், கடற்கரை சுற்றுலா பயணியர் சவாரி செல்வதற்காக குதிரை வளர்க்கின்றனர். இதற்கு மாநகராட்சி மற்றும் காவல் துறையிடம் முறையாக அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் கடற்கரை பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை விற்பனைக்கு குதிரையை பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், சட்டவிரோத செயல்களுக்கு துாண்டுகோலாக கடற்கரை மாறுவதாக, மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சுகாதாரம், பாதுகாப்பு கருதி உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து, பெரிய நீலாங்கரை மீனவ சங்கத்தினர் கூறியதாவது:
அரசு உத்தரவை மீறி, குடியிருப்புக்கு மத்தியில் கொட்டகை அமைத்து, குதிரை வளர்க்கின்றனர். சுகாதார சீர்கேடு, கொசு உற்பத்தி அதிகரிப்பு, தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.
குதிரைகளை சிலர் தவறான செயலுக்கு பயன்படுத்துவதால், இங்குள்ள இளைஞர்கள் வழிதவறி செல்லும் சூழல் நிலவுகிறது. மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மீனவர்களின் புகாரின் அடிப்படையில், குதிரை கொட்டகையை ஆய்வு செய்தோம். அனுமதி இல்லாமல் வளர்ப்பது தெரிந்தது.
இதைத் தொடர்ந்து குதிரை வளர்ப்போருக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளோம். குதிரையை சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்துவது தொடர்பாக, காவல் துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.