/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாநகராட்சி தொழில் வரி, விளையாட்டு கட்டணம் உயர்வு! சாலையில் மாடு சுற்றினால் ரூ.15,000 அபராதம்மாநகராட்சி தொழில் வரி, விளையாட்டு கட்டணம் உயர்வு! சாலையில் மாடு சுற்றினால் ரூ.15,000 அபராதம்
மாநகராட்சி தொழில் வரி, விளையாட்டு கட்டணம் உயர்வு! சாலையில் மாடு சுற்றினால் ரூ.15,000 அபராதம்
மாநகராட்சி தொழில் வரி, விளையாட்டு கட்டணம் உயர்வு! சாலையில் மாடு சுற்றினால் ரூ.15,000 அபராதம்
மாநகராட்சி தொழில் வரி, விளையாட்டு கட்டணம் உயர்வு! சாலையில் மாடு சுற்றினால் ரூ.15,000 அபராதம்
UPDATED : ஜூலை 31, 2024 05:50 AM
ADDED : ஜூலை 30, 2024 11:27 PM

சென்னை : சென்னை மாநகராட்சியில் தொழில் வரி, உரிமம் கட்டணம், விளையாட்டு பயிற்சி கட்டணம் உள்ளிட்டவை உயர்த்தப்பட உள்ளது. அத்துடன், சாலையில் மாடுகள் திரிந்தால், அதற்கான அபராதமும் 15,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை உரிமம் வழங்கும் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த 32 தொழில்களுக்கு கட்டணம் விதிப்பதில் இருந்து, மாநகராட்சி விலகிக் கொண்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாதந்திர கவுன்சில் கூட்டம் மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளுக்கான அபராத தொகை உயர்வு, தொழில் வரி உயர்த்துவதற்கான பரிந்துரை, விளையாட்டு திடல்களில் பயிற்சிக்கான கட்டண உயர்வு உள்ளிட்ட, 72 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
குறு, சிறு, நடுத்தர, பெரிய வணிகம் என்ற அடிப்படையில், தொழில் உரிம கட்டணத்தை உயர்த்த, அரசுக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதன்மை குடியிருப்பு பயன்பாடு, கலப்பு குடியிருப்பு, வணிக பயன்பாடு, தொழில்துறை பயன்பாடு, பொது தொழில்துறை பயன்பாடு, சிறப்பு மற்றும் அபாயகரமான தொழில்துறை பயன்பாடு, நகர்ப்புறப்படுத்தக்கூடியது என்ற அடிப்படையில், தொழில் உரிம கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
அதன்படி, 500 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்திய தொழில்களுக்கு, இனி 3,500 முதல் 50,000 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
குறு தொழிகளுக்கு 3,500 ரூபாய் முதல் 7,000 ரூபாய், சிறு தொழில்களுக்கு 7,000 முதல் 10,000, நடுத்தர தொழில்களுக்கு 10,000 முதல் 20,000, பெரிய வணிகங்களுக்கு 15,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை உரிமம் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
அதேநேரம், மதுபானம் விற்பனை, பீடி தயாரிப்பு, மருந்து தயாரிப்பு, மதுக்கூடம் நடத்துதல், ரேஷன் கடை உள்ளிட்ட 32 தொழில் சார்ந்த வணிகங்களுக்கு, இனி மாநகராட்சி சார்பில் உரிமம் வழங்கப்படாது. இந்த 32 வணிக பயன்பாடுகள் மத்திய, மாநில அரசுகளின் அனுமதிக்கு உட்பட்டு செயல்படும் வகையில், உரிமம் வழங்குவதில் இருந்து மாநகராட்சி விலகிக் கொண்டுள்ளது.
தொழில்வரி மற்றும் உரிம கட்டணம் உயர்வுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் பேசுகையில், ''மாநகராட்சியின் உட்கட்டமைப்புகளுக்கு அரசின் நிதி ஆதராரங்கள் மட்டும் போதுமானதாக இருக்காது. சரியான நேரத்தில் தான், தொழில் வரி மற்றும் உரிம வரி உயர்த்தப்பட உள்ளது,'' என்றார்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள் வருமாறு:
* சென்னையில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்தால், அவை பிடிக்கப்பட்டு உரிமையாளருக்கு முதல்முறை 5,000 ரூபாய், இரண்டாம் முறை 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்தாண்டில் இதுவரை, 1,425 மாடுகள் பிடிக்கப்பட்டு, 59 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இனி, மாடுகள் சுற்றித்திரிந்தால் முதல்முறை 10,000 ரூபாய், இரண்டாம் முறை 15,000 ரூபாயாக அபராதம் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும், பிடிப்பட்ட மூன்றாம் நாளில் இருந்து, 1,000 ரூபாய் பராமரிப்பு செலவாக வசூலிக்கப்படும்
* சென்னையில் உள்ள, 390 அம்மா உணவகங்களில், 23,848 பாத்திரம் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இந்த இயந்திரங்களை மாற்ற 7.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது
* சாலையோர வாகன நிறுத்தத்தில் கட்டணம் வசூல் செய்ய, தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. தற்போது, தமிழ்நாடு முன்னாள் படைவீர் கழகத்தினர் கட்டணம் வசூல் செய்வதற்கான பேச்சு நடந்து வருகிறது. அதுவரை, இலவசமாக வாகன நிறுத்தி கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது
* மாநகராட்சி சமுதாய நலக்கூடங்களில் ஓய்வு பெற்ற அலுவலர்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 50 சதவீத கட்டண சலுகையை, 75 சலுகை கட்டணமாக நீட்டித்து வழங்க அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.