ADDED : ஜூலை 05, 2024 12:37 AM

ஸ்ரீபெரும்புதுார், ஒரகடத்தில், கார் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனத்தின் பேருந்து ஒன்று, அங்கிருந்து ஊழியர்கள் மூவருடன், நேற்று மாலை ஸ்ரீபெரும்புதுார் நோக்கிச் சென்றது.
திருவள்ளூரைச் சேர்ந்த ராஜி, 30, என்பவர் பேருந்தை ஓட்டினார்.
ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், வல்லக்கோட்டை அருகே வந்தபோது, பேருந்தின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது.
உடனே டிரைவர் ராஜி, பேருந்தை நிறுத்தியதும், தீப்பற்றி எரியத் துவங்கியது.
பேருந்தில் இருந்தவர்கள் இறங்கி தப்பியோடினர். சற்று நேரத்தில், தீ மளமளவென பரவி, கொழுந்துவிட்டு எரிந்தது.
தகவலின்படி வந்த ஒரகடம் தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். அதற்குள், பேருந்து முழுதும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து, ஒரகடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
லாரி தீக்கிரை
துாத்துக்குடியில் உப்பு ஏற்றிய லாரி, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடி அருகே, நேற்று காலை வந்தபோது, டிரைவர் கேபினில் புகை வெளியேறியது.
ஆந்திர மாநிலம் காவேரிபட்டினம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் சாமி, 48, சுதாரித்து, லாரியை ஓரமாக நிறுத்தி கீழே குதித்தார்.
சிறிது நேரத்தில் லாரி கேபின் தீப்பற்றி எரிந்தது. கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். எனினும், லாரியின் முன்பக்கம் எரிந்தது.