/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெருங்களத்துார் மேம்பால திட்டம் நெடுங்குன்றம் பாதை பணிக்கு சிக்கல் பெருங்களத்துார் மேம்பால திட்டம் நெடுங்குன்றம் பாதை பணிக்கு சிக்கல்
பெருங்களத்துார் மேம்பால திட்டம் நெடுங்குன்றம் பாதை பணிக்கு சிக்கல்
பெருங்களத்துார் மேம்பால திட்டம் நெடுங்குன்றம் பாதை பணிக்கு சிக்கல்
பெருங்களத்துார் மேம்பால திட்டம் நெடுங்குன்றம் பாதை பணிக்கு சிக்கல்
ADDED : ஜூன் 18, 2024 12:11 AM
பெருங்களத்துார்,
பெருங்களத்துார் மேம்பால திட்டத்தில், நெடுங்குன்றம் மார்க்கமான பணிகளை துவக்க, மத்திய வனத்துறையிடம் அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவதால், பணிகளை துவக்குவதில் சிக்கல் நீடிக்கிறது.
சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகில், 234 கோடி ரூபாய் செலவில், மாநில நெடுஞ்சாலை- மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து, மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இத்திட்டத்தில் முதல் கட்டமாக, ஜி.எஸ்.டி., சாலையில் செங்கல்பட்டு- - தாம்பரம் மார்க்கமான ஒருவழிப்பாதை, கடந்த 2022ல் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
தொடர்ந்து, புது பெருங்களத்துார், சீனிவாசா நகர் வழியாக இறங்கும் பாதையும் திறக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக, ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார் மார்க்கமான பணிகள் துவங்கி, 85 சதவீதம் முடிந்துள்ளன. இம்மாத இறுதியில் இப்பாதையை திறக்க திட்டமிட்டுள்ளனர். இப்பாதை திறந்தால், பெருங்களத்துாரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் இன்னும் குறையும்.
அடுத்ததாக, நெடுங்குன்றம் மார்க்கமான பாதை மட்டுமே உள்ளது. இப்பாதை அமையவுள்ள இடத்தின் பெரும் பகுதி, வனத்துறைக்கு சொந்தமானது. இதற்காக அனுமதி கேட்டு, மத்திய வனத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதேபோல், பெருங்களத்துார் வழியாக ராஜகீழ்ப்பாக்கத்தை இணைக்கும் தாம்பரம் ஈஸ்டர்ன் பைபாஸ் சாலை திட்டத்திற்கும் நிலம் கேட்டு, மத்திய வனத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இரண்டு கடிதங்களையும் பார்த்த மத்திய வனத்துறை அதிகாரிகள், இரண்டையும் ஒரே திட்டம் என புரிந்துகொண்டு, தனித்தனியாக கடிதம் அனுப்பப்பட்டது ஏன் என கேட்டு, திருப்பி அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின், இரண்டும் ஒரே திட்டம் இல்லை. வெவ்வேறு திட்டங்கள் என அவர்களுக்கு புரிய வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, இரண்டாவது முறையாக நிலம் கேட்டு, கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
மத்திய வனத்துறையிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், நிலத்தை கையகப்படுத்த அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மற்றொருபுறம், 12 கோடி ரூபாயை நெடுஞ்சாலைத் துறை செலுத்தி விட்டதால், இடையில் உள்ள துணை மின் நிலையத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையும் விரைவில் துவங்க உள்ளது.
இக்காரணங்களால், நெடுங்குன்றம் சாலை மார்க்கமான பாதை பணியை துவக்குவதில், தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.